சென்னை அசோக் நகர் 12வது நிழற்சாலையை சேர்ந்தவர் சீனிவாசன் (62). ரயில்வே துறையில் தலைமை கட்டுப்பாட்டாளராக இருந்து 2020ம் ஆண்டு செப்டம்பரில் பணி ஓய்வு பெற்றவர். இவரது மகள்கள் இருவருக்கும் திருமணமாகி ஒருவர் அமெரிக்காவிலும் மற்றொருவர் பெருங்குடியிலும் வசித்து வருகின்றனர்.
சீனிவாசனின் மனைவி மீனா கடந்த 7ம் தேதி சொந்த ஊரான எர்ணாகுளத்திற்கு சென்று விட்டதால் அவர் மட்டும் வீட்டில் இருந்தார். இதனையடுத்து கடந்த ஏப்ரல் 12ம் தேதி இரவு 7 மணியளவில் வீட்டை பூட்டிவிட்டு ராகவன் காலனி நான்காவது குறுக்கு தெருவில் உள்ள அம்மா வீட்டிற்கு சென்றுவிட்டு 13ம் தேதி காலை வீடு திரும்பியிருக்கிறார்.
அப்போது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 120 சவரன் தங்க நகை, 4 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவை திருட்டு போனது தெரியவந்தது. இதுதொடர்பாக குமரன் நகர் காவல் நிலையத்தில் சீனிவாசன் புகார் செய்தார். காவல்துறை அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது கைவரிசை காட்டிவிட்டு சென்றது திருப்பத்தூரை சேர்ந்த பிரபல கொள்ளையன் ஹாரி பிலிப்ஸ் (60) என்பது தெரியவந்தது.
இதையடுத்து தனிப்படை தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். திருப்பத்தூரில் தனது இரண்டாவது மனைவி காந்திமதி வீட்டில் குடிபோதையில் தூங்கிக் கொண்டிருந்த ஹாரி பிலிப்ஸை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 47 சவரன் நகைகள் மீட்கப்பட்டுள்ளன. மீதமுள்ள நகைகளை எங்கே பதுக்கி வைத்திருக்கிறார் என்ற விசாரணை நடைபெறுகிறது.
கைதான ஹரி பிலிப்ஸ் கடந்த 20 ஆண்டுகளாக சென்னை, பெங்களூர் ஆகிய நகரங்களில் தனது கைவரிசையை காட்டி வந்துள்ளார். சென்னையில் மட்டும் இவர் மீது 50க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதுவரை 23 முறை சிறைக்கும் சென்றிருக்கிறார்.
முதல் மனைவி மற்றும் பிள்ளைகள் இவரை ஒதுக்கிய நிலையில் தற்போது காந்திமதி (50) என்ற பெண்ணுடன் வசித்து வருகிறார். காந்திமதியையும் காவல்துறை சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைதான ஹரி பிலிப்ஸ், ஹோட்டல் உள்ளிட்ட பல தொழில்களை செய்துள்ளார். தொட்ட ஒரு தொழில் கூட துலங்காமல் போனதால்தான் கடந்த 20 ஆண்டுகளாகவே கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளார் என காவல்துறை விசாரணையில் தெரிவித்தனர்.