கோவை வடவள்ளியில் இருந்து ரயில் நிலையத்துக்கு அரசுப் பேருந்து வழித்தட எண் 1C-ல், கடந்த மார்ச் 7, 2015-ல் கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் காஸ் செயலர் கதிர்மதியோன் பயணித்துள்ளார். அதே பேருந்தில் திரும்பியும் சென்றுள்ளார் அவர். அப்போது தலா ரூ.8 பேருந்து கட்டணம் அவரிடம் பெறப்பட்டுள்ளது. சாதாரண பேருந்தாக இயங்க அனுமதி பெற்றுவிட்டு ரூ.5 பெறுவதற்கு பதில் கூடுதலாக ரூ.3 சேர்த்து வசூலிக்கப்பட்டதால், கதிர்மதியோன் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவை விசாரித்த மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், கடந்த 2018 பிப்ரவரி 15-ம் தேதி, “மனுதாரரிடமிருந்து கூடுதலாக வசூலிக்கப்பட்ட ரூ.6-ஐ அரசுப் போக்குவரத்துக் கழகம் திருப்பி அளிக்க வேண்டும் என்றும், அதோடு, இழப்பீடான ரூ.10 ஆயிரத்தை முதல்வரின் பொதுநிவாரண நிதிக்கு செலுத்த வேண்டும். இதை 2 மாதங்களில் செலுத்தவில்லையெனில் 9 சதவீத வட்டியுடன் அந்த தொகையை அளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டிருந்தது.
இந்த விதிமீறல் தொடர்பாக அப்போதே விசாரித்த கோவை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் (ஆர்டிஓ), “இவ்விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுத்தற்கான உத்தரவை 2 மாதங்களில் தாக்கல் செய்யாவிட்டால், முதல்வரின் பொதுநிவாரண நிதிக்கு ரூ.10 ஆயிரத்தை ஆர்டிஓ செலுத்த வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து அரசுப் போக்குவரத்துக்கழகம் சார்பில் மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை விசாரித்த மாநில ஆணையம், அதை தள்ளுபடி செய்து, மாவட்ட ஆணையத்தின் உத்தரவை 2022 ஆகஸ்ட் 26-ம் தேதி உறுதிசெய்தது. இருப்பினும்கூட, போக்குவரத்து கழகம் சார்பில் இழப்பீடு செலுத்தப்படவில்லை.
இதையடுத்து, அந்த உத்தரவை நிறைவேற்றக்கோரி கோவை அரசுப் போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர், கோவை தெற்கு ஆர்டிஓ ஆகியோருக்கு கதிர்மதியோன் தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதில், “மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் மனுவை தள்ளுபடி செய்துள்ளதால், மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் உத்தரவை எப்போதோ போக்குவரத்து கழகம் நிறைவேற்றியிருக்க வேண்டும். ஆனால், தற்போது வரை அந்த உத்தரவு நிறைவேற்றப்படவில்லை. அந்த உத்தரவை இந்த நோட்டீஸ் கிடைக்கப்பெற்ற 15 நாட்களுக்குள் நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில், நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்பிரிவுகள் 25, 27-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.