கடல் நீரால் சூழப்போகும் சென்னை உள்ளிட்ட இந்திய நகரங்கள்.. 3 அடி அளவிற்கு உயரப் போகும் நீர் மட்டம்!

மிக்ஜாம் புயல் எதிரொலியாக கொட்டித்தீர்த்த மழைநீரால் சென்னையே வெள்ளக்காடாக மாறியுள்ளது. இந்த நிலையில், சென்னையே கடல்நீரால் சூழ இருக்கும் அதிர்ச்சித்தகவல் ஒன்று மீண்டும் பேசுபொருளாக மாறியுள்ளது. முழு தகவல்களை பார்க்கலாம்.
sea level increase
sea level increasefile image
Published on

மிக்ஜாம் புயலால், சென்னையில் டிசம்பர் 3, 4 ஆகிய தேதிகளில் 48 மணி நேரத்தில் சுமார் 40 செண்டிமீட்டர் வரை மழை பதிவானது. இதனால், ஒட்டுமொத்த சென்னையும் வெள்ளக்காடாக மாறியது. வருடா வருடம் நவம்பர் - டிசம்பர் மாதங்களில் வந்து செல்லும் வடகிழக்குப் பருவ மழையானது, சென்னையை வெள்ளக்காடாக மாற்றிவிட்டுச் செல்லும். அந்த வகையில் இந்த ஆண்டு வந்த வடகிழக்குப்பருவ மழை மற்றும் மிக்ஜாம் புயலானது, கடந்த 2015ம் ஆண்டு சென்னை பெருவெள்ளத்தை நினைவுபடுத்திவிட்டு சென்றுள்ளன.

இந்த நிலையில், கடல் நீர் மட்டத்தின் உயர்வால் இந்த நூற்றாண்டுக்குள் சென்னை உள்ளிட்ட கடலோர நகரங்களுக்கு பெரும் ஆபத்து காத்திருக்கும் செய்தி குறித்த பேச்சு மீண்டும் மேலோங்கியுள்ளது.

தொடர்ந்து உயரும் கடல்நீர் மட்டம்!

இந்திய அளவில் மட்டுமல்லாது, சர்வதேச அளவில் கடல்நீர் மட்டமானது தொடர்ந்து உயர்ந்து வருகிறது. உலக வானிலை மையத்தின் தகவலின் படி, 1971ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை சராசரியாக கடல்நீர் மட்டமானது ஆண்டுக்கு 1.9 மில்லிமீட்டர் உயரம் அதிகரித்து வருகிறது.

ஆனால், 2006 முதல் 2018ம் ஆண்டு வரை சராசரியாக ஆண்டுக்கு 3.7 மில்லி மீட்டர் உயரம் அதிகரித்து வந்துள்ளது. இந்த கடல்நீர் மட்டம் உயர்வால் இந்தியா, சீனா, பங்களாதேஷ் மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு அச்சுறுத்தல் இருக்கிறது.

கடல்நீரால் சூழ இருக்கும் சென்னை!

பணிப்பாறை உருகுவது மற்றும் காலநிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால், கடல்நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். அதன்படி, 2050ம் ஆண்டுக்குள் 70 லட்சம் விவசாயிகள் மற்றும் மீனவர்கள் இந்த கடல்நீர் மட்ட உயர்வால் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.

தோராயமாக 1500 சதுர கிலோமீட்டர் பரப்பளவும் கடலுக்குள் மூழ்கும் என்றும் எச்சரிக்கின்றனர். கடந்த 2021ம் ஆண்டு வெளியான அறிக்கையின் படி, சென்னை உள்ளிட்ட இந்தியாவின் 12 கடலோர நகரங்கள் கடல்நீருக்குள் மூழ்கும் அபாயம் இருக்கிறது.

1.87 அடி கடல்நீருக்கடியில் சென்னை!

இந்த நூற்றாண்டின் இறுதியில் சென்னை மாநகரானது 1.87 அடி கடல்நீரால் சூழப்படும் என்கிறது காலநிலை மாற்றம் குறித்த அரசுகளுக்கிடையேயான குழு(IPCC). இதன் அறிக்கையின் முழு விவரங்கள் பின்வருமாறு..

தூத்துக்குடி 1.9 அடி கடல்நீராலும், விசாகப்பட்டினம் 1.77 அடி, கொச்சின் 2.32 அடி, மங்களூரு 1.87, பாராடிப் 1.93 அடி, கிடிர்பூர் 0.49 அடி, மும்பை 1.90 அடி, ஒக்கா 1.96அடி, பௌனகர் 2.70 அடி, காந்த்லா 1.87 அடி மற்றும் மோர்முகௌ 2.06 அடி கடல்நீரால் சூழப்படும் என்று கூறுகிறது. மற்றொரு ஆய்வின் தகவல்படி, 2100ம் ஆண்டுப்படி, 16 சதவீதமான சென்னை கடல்நீரால் பாதிக்கப்படும் என்று கூறுகிறது. கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் இதனால் பாதிக்கப்படக்கூடும் என்றும் தெரிகிறது.

குறிப்பாக கட்டுக்கடங்காத மக்கள்தொகை மக்கள் தொகையை கொண்டிருக்கும் சென்னை, மும்பை மற்றும் கொல்கத்தா போன்ற நகரங்கள் கடல்நீர் மட்ட உயர்வால் வெகுவாக பாதிப்புக்கு உள்ளாகும் என்று தெரிகிறது. இதுபோன்ற ஆபத்துக்களில் இருந்து தப்ப, காலநிலைக்கு ஏற்றவாறு சுற்றுசூழலை அணுகுவதும், கடலோர நகரங்களில் சூழலுக்கு உகந்த வகையில் கட்டுமானங்கள் மற்றும் குடியிருப்புகளை அமைப்பதும் முக்கிய பங்கு வகிக்கும் என்கின்றனர் வல்லுநர்கள். அந்த வகையில் இப்போது வந்து சென்றுள்ள மிக்ஜாம் புயல் என்பது ஒரு சிறிய எச்சரிக்கை மணி என்பதை புரிந்துகொள்ள வேண்டும்..

எழுத்து - யுவபுருஷ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com