வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தவுள்ளார்.
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவிருப்பதால், தென் தமிழகத்தில் வரும் 25 ஆம் தேதி முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே பெய்த கனமழையால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் நிலையில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் போர்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில், புதிதாக உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை அன்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.
தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலி வாயிலாக நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில், மழை பாதிப்புகளை சமாளிப்பது, உடனுக்குடன் மீட்பு, நிவாரணப் பணிகளை மேற்கொள்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஆலோசிப்பார் என தெரிகிறது.