உத்தரப்பிரதேச மாநிலம் பைசாபாத் நகரைச் சேர்ந்த இளம் கட்டுமானத் தொழிலாளி சச்சின் என்ற இளைஞர் (25), தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கட்டுமான வேலை செய்து கொண்டிருந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவர் வேலை செய்து கொண்டிருந்தபோது அவர் உடலில் இருந்து கடுமையான வேர்வை வெளியேறிய நிலையில், பேச்சும் குளறியுள்ளது.
ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்ட அவரை அங்கிருந்தவர்கள் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்று நள்ளிரவு ராஜிவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
அதேநேரம் ஏற்கெனவே ராஜிவ் காந்தி மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் வார்டில் சிகிச்சை பெற்று வரும் பூந்தமல்லியைச் சேர்ந்த 35 வயது கட்டடத் தொழிலாளி நலமுடன் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் வடமாநில தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் டீன் தேரணி ராஜன் புதிய தலைமுறைக்கு பேசுகையில், “Heat stroke-ஆல் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சுயநினைவின்றி வந்த இளைஞர் ஒருவர் இன்று ராஜீவ் காந்தி மருத்துவமனையில் உயிரிழந்திருக்கிறார். நாங்கள் சொல்வதெல்லாம், தொழில் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் தங்களுடைய பணியாளர்கள் வெயிலில் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியில் வேலை செய்ய அனுமதிக்காமல் உதவி செய்ய வேண்டும்.
மற்றபடி,
ஐஸ் வாட்டர் தொடர்ந்து குடிப்பதால் செரிமான பிரச்னை ஏற்படக்கூடும். அதிகமாக ஐஸ் வாட்டர் குடிப்பவர்களுக்கு இதய பிரச்னை வரகூட வாய்ப்புள்ளது. எனவே சாதாரண அறை வெப்ப நிலையில் உள்ள குடிநீரை குடிப்பது நல்லது. அதிக கலோரிகள் கொண்ட இனிப்பு குளிர்பானங்களை தவிர்த்து இளநீர் போன்ற பானங்களை அருந்துவது நல்லது.
வெயிலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காகவே தனி வார்டு ராஜிவ் காந்தி மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஐந்து படுக்கைகள் கொண்ட அந்த வார்டில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன” என்றார்.