திருச்சி பொன்மலை இரயில்வே பணிமனையில் ஆர்.ஆர்பி கிரேடு-3 க்கான பணியிடங்களில் 500க்கும் மேற்பட்ட வடஇந்தியர்களுக்கு பணி வழங்கப்பட்டுள்ளதாகவும், அதில் 15 பேர் மட்டுமே தமிழர்கள் என்றும் தெரியவந்துள்ளது. இதனை கண்டித்து இன்று பொன்மலை ரயில்வே பணிமனையை முற்றுகையிட்டு பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ரயில்வேயில் பல்வேறு பணியிடங்களுக்காக கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற ஆர்.ஆர்.பி தேர்வில் தேர்வான மற்றும் அப்ரண்டீஸ் முடித்தவர்கள் என 500க்கும் மேற்பட்ட வட இந்தியர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் பணிஆணை வழங்கும் பணிக்காக பொன்மலை பணிமனைக்கு அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு கடந்த மூன்று நாட்களாக சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் மத்திய அரசு பணியிடங்களில் தென்னக ரயில்வே பணிகளில் தமிழக இளைஞர்கள் புறக்கணிக்கபடுவதற்கும் கண்டனம் தெரிவித்தும், பணிமனையில் பயிற்சி முடித்த தமிழர்களுக்கு உடனடியாக பணி வழங்க வலியுறுத்தியும்,கொரோனா ஊரடங்கு காலத்தில் வட இந்தியர்களுக்காக நேர்காணல் நடத்தப்படுவதை கண்டித்தும் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு அமைப்பினர் பொன்மலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று, தமிழ்நாட்டில் மத்திய அரசு பணியிடங்களில் 90 சதவீத பணியிடங்களை தமிழர்களுக்கு ஒதுக்க வேண்டும், தென்னக தொடர்வண்டி பணிமனையில் பயிற்சி முடித்த தமிழக இளைஞர்களுக்கு உடனடியாக வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் தேசிய பேரியக்கம், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பை சேர்ந்த 200 க்கும் மேற்பட்டோர் கருப்புக் கொடியுடன் பேரணியாக வந்து திருச்சி பொன்மலை இரயில்வே பணிமனை முன்பு முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசு இந்த கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தக்கட்டமாக பணிமனைக்குள் சென்று போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.