சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக விண்ணப்பிக்க, அம்பத்தூர் தொழிற்பேட்டையில் வட மாநில தொழிலாளர்கள் குவிந்ததால் பரபரப்பு நிலவியது.
நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள பொது ஊரடங்கு காரணமாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தாங்கள் வேலை செய்த பகுதிகளிலே இருந்து வந்தனர். சிலர் கால்நடையாகவே பல நூறு கிலோமீட்டர் பயணம் செய்து சொந்த மாநிலங்களுக்கு சென்றடைந்தனர். இருப்பினும், பெரும்பாலானோர் வேலைக்கு சென்ற மாநிலங்களிலேயே தங்கி வந்தனர். சரியான உணவு கிடைக்கவில்லை என்று சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டியும் சிலர் போராட்டங்களையும் நடத்தினர்.
இந்நிலையில், புலம்பெயர்ந்து பல மாநிலங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களை அவர்களது சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்க மத்திய, மாநில அரசுகள் ஏற்பாடு செய்து வருகின்றன. அந்த வகையில் சென்னை அம்பத்தூரிலும் நடைபெற்ற கணக்கெடுப்பு பணியின் போது ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அம்பத்தூர் தொழிற்பேட்டையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக அவதிப்பட்டு வரும் நிலையில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொண்டு வரப்படுகிறது. இந்த நிலையில், சொந்த ஊருக்கு செல்ல விருப்பம் உள்ளவர்கள் மற்றும் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள வட மாநில தொழிலாளர்களை கணக்கெடுக்கும் பணிக்காக அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல்துறையினர் அவர்களின் விவரத்தை பெற்று வருகின்றனர்.
இதனால் அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையத்தில் 500 க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் குவிந்துள்ளனர். சமூக இடைவெளியை மறந்து வட மாநில தொழிலாளர்கள் அங்கு குவிந்துள்ளதால் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் திணறி வருகின்றனர்.