“3 நாட்களாக சாப்பிடவில்லை” - பசி தாங்கமுடியாமல் சென்னையில் போராடிய வடமாநிலத்தினர்..!

“3 நாட்களாக சாப்பிடவில்லை” - பசி தாங்கமுடியாமல் சென்னையில் போராடிய வடமாநிலத்தினர்..!
“3 நாட்களாக சாப்பிடவில்லை” - பசி தாங்கமுடியாமல் சென்னையில் போராடிய வடமாநிலத்தினர்..!
Published on

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உணவின்றி தவித்த வட மாநில தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை, அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே செல்லியம்மன் நகரில் உள்ள தொழிற்சாலைகளில் வடமாநில தொழிலாளர்கள் சுமார் 600 பேர் சுமை தூக்கும் வேலை செய்து வந்தனர். கடந்த 24ம் தேதி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் அவர்கள் வேலை இழந்து, சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் சிக்கிக்கொண்டனர். அவர்களுக்கு அம்பத்தூர் மண்டலம் சார்பில் 10 நாட்களுக்கு உணவு வழங்கப்பட்டது. அதன் பின் காவல்துறையினர் உட்பட சமூக ஆர்வலர்கள் சார்பில் அரிசி, பருப்பு, காய்கறிகள் என அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டன.

இதைத்தொடர்ந்து அவர்களுக்கு எதுவும் வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது. இதனால் பசியால் வாடிய அவர்கள், வேறு வழியின்றி இன்று அம்பத்தூர் தொழிற்பேட்டையின் சென்னை - திருப்பதி சாலையில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். சுமார் 200 பேர் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் அங்கு பரபரப்பானது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர்
போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உணவு ஏற்பாடு செய்வதாக சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இவர்கள் நேற்று மதியமும் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

வட மாநில தொழிலாளிகள் கூறுகையில், “ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு ஒரு மாதம் ஆன நிலையில், தினக் கூலி வேலைக்கு சென்ற நாங்கள், ஒரு ரூபாய் கூட இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். அம்பத்தூர் மண்டலம் சார்பில் எங்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது முதல் 10 நாட்களாக உணவு வழங்கப்பட்ட நிலையில், தற்போது அது நிறுத்தப்பட்டுள்ளது. மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளோம். அதுமட்டுமின்றி இங்கு தங்கியிருக்கும் ஊழியர்கள் கடந்த இரண்டு மூன்று நாட்களாக உணவருந்தாமல் உள்ளனர். தமிழக முதல்வருக்கு நாங்கள் கேட்டுக் கொள்வது என்னவென்றால் நாங்கள் அனைவரும் எங்கள் ஊருக்குத் திரும்பிச் செல்ல பேருந்து அல்லது ரயில் ஏற்பாடு செய்தால் மிகவும் உதவிகரமாக இருக்கும்” என்று தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com