மதுரை விமான நிலையத்தில் விரிவாக்க பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அதனொருபகுதியாக புதிதாக விமான நிலைய முனைய கட்டிடம் கட்டும் வேலையும் நடைபெற்று வருகிறது. இதில் பணியாற்றுவதற்காக வட மாநில தொழிலாளர்கள் பலர் குடும்பத்துடன் அப்பகுதியிலேயே தங்கியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவில் மதுரை விமான நிலைய ஓடுபாதை சுற்றுச்சுவரை ஏறிக்குதித்து இளைஞர் ஒருவர் உள்ளே சுற்றித் திரிந்துள்ளார். இதனைகண்ட சிஐஎஸ்எப் ஆய்வாளர் துருவேய்குமார் ராய் அதிகாரிகளை அழைத்து கண்காணித்துள்ளார். அவர் தலைமையில் உடனடியாக அந்த இளைஞரை சுற்றி வளைத்து பிடித்து மதுரை அவனியாபுரம் காவல் நிலையத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
இதையடுத்து அந்த இளைஞரிடம் விசாரித்ததில், அவர் மேற்கு வங்கத்திலிருந்து இங்கு வந்து வேலை பார்த்துவரும் யுகில் மார்டியின் மகன் கிலியன் மார்டி (19) என்பதும், இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. மேற்கொண்டு யுகில் மார்டியிடம் விசாரித்ததில் தன் மகனுக்கு மனநிலை சரியில்லாததால் வேலைக்கு எங்கும் அனுப்பாமல், அவரை தன்னுடன் வைத்திருப்பதாகவும்; இரவு நேரத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் போது தங்களுக்கு தெரியாமல் அவர் விமான நிலையத்திற்குள் சென்று விட்டதாகவும் தெரிவித்துள்ளார் அவர்.
இதையடுத்து அவனியாபுரம் காவல் துறையினர் கிலியன் மார்டி மீது வழக்கு எதுவும் பதியாமல் அனுப்பி வைத்தனர்.