கன்னியாகுமரி கடலில் பாறை மீது ஏறி நின்று செல்ஃபி எடுத்த இளைஞர் ராட்சத அலையில் சிக்கி மாயமானார்.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் கடல்பகுதிக்கு உள்ளூர் மட்டுமில்லாமல் வெளி மாவட்ட சுற்றுலா பயணிகளும் அதிக அளவில்
வந்து செல்கின்றனர். சனி மற்றும் ஞாயிறு தினங்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படும். அங்குள்ள கடல்பகுதியின்
பாறைகள் மீது சுற்றுலா வரும் பயணிகள் ஆபத்தை அறியமால் செல்ஃபி எடுத்து வந்துள்ளனர். இதில் அடிக்கடி உயிரிழப்புகள்
ஏற்பட்டும், சுற்றுலா பயணிகள் செல்ஃபி எடுப்பது குறையவில்லை.
இந்நிலையில் இன்று அழகியமண்டபம் பகுதியில் உள்ள மர அறுவை ஆலையில் தங்கி வேலை பார்க்கும் உத்திரபிரதேசத்தை சேர்ந்த
ஹாசிப் மாலிக் என்ற இளைஞர் தனது 4 நண்பர்களுடன் குளைச்சல் கடல் பகுதிக்கு வந்துள்ளார். அப்போது அங்கிருந்த புனித
அலெக்ஸ் பாறை மீது ஏறி நின்று ஒவ்வொருவராக செல்ஃபி எடுத்துள்ளனர். கடைசியாக ஹாசிப் மாலிக் செல்ஃபி எடுக்க
முயன்றபோது, ராட்சத அலை வந்து அவரை கடலுக்குள் இழுத்துச்சென்றுள்ளது. அவரை காப்பாற்ற சக நண்பர்கள் கூச்சலிட்டுள்ளனர்.
ஆனால் அப்பகுதி மீனவர்கள் அங்கு வரும் முன் ஹாசிப் மாலிக் கடலில் மூழ்கி மாயமாகியுள்ளார். இதையடுத்து தகவலறிந்து வந்த
கடலோர காவல்துறையினர் உள்ளூர் மீனவர்கள் உதவியுடன், படகு மூலம் மாயமான இளைஞரை தேடி வருகின்றனர்.