“ தண்ணீரும் இல்லை.. புத்தகமும் இல்லை..”- பள்ளிகளில் திண்டாடும் மாணவர்கள்..!

“ தண்ணீரும் இல்லை.. புத்தகமும் இல்லை..”- பள்ளிகளில் திண்டாடும் மாணவர்கள்..!
“ தண்ணீரும் இல்லை.. புத்தகமும் இல்லை..”- பள்ளிகளில் திண்டாடும் மாணவர்கள்..!
Published on

தமிழகம் முழுவதும் கடந்த 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் தண்ணீர் இல்லாமலும், புத்தகங்கள் கிடைக்காமலும் மாணவர்கள் அவதியுற்று வருகின்றனர்.

தமிழகத்தில் கடந்தாண்டு 1, 6, 9, 11-ஆம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் கொண்டுவரப்பட்டது. அதனைத்தொடர்ந்து இந்தாண்டு 2, 3, 4, 5, 7, 8, 10, 12 ஆகிய வகுப்புகளுக்கு பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளது. கோடை விடுமுறை முடிந்து கடந்த 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் அன்றைய தினமே மாணவர்களுக்கு புதிய புத்தகங்கள் வழங்கப்படும் என அரசு தெரிவித்தது.

ஆனால் பள்ளிகள் திறக்கப்பட்டு கிட்டத்தட்ட 15 நாட்கள் ஆகிய நிலையில் இன்னும் பல பள்ளிகளில் மாணவர்களுக்கு புத்தகங்கள் சென்றடையவில்லை. இதனால் மாணவர்கள் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். 3, 4, 5, 8 வகுப்புகளுக்கான பாடப் புத்தகங்கள் தான் பல பள்ளிகளை முழுமையாக சென்றடையவில்லை. இதனால் ஆசிரியர்களும் பாடங்களை நடத்த முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். ஏற்கெனவே பாடப் புத்தகங்கள் மாற்றப்பட்டுள்ளதால் அதில் என்னென்ன தகவல்கள் இடம்பெற்றிருக்கும் என்பது ஆசிரியர்களுக்கு முழுமையாக தெரியாமல் உள்ளது. இந்நிலையில் பாடப்புத்தகங்களும் பள்ளிகளை சென்றடையாமல் இருக்கின்றது. இதனால் தேர்வு நேரங்களில் மாணவர்கள் கடும் சுமையை சந்திக்க நேரிடும் என கூறப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க தமிழகம் முழுவதையும் வாட்டி வதைத்து வரும் தண்ணீர் பஞ்சம் பள்ளிகளையும் விட்டுவைக்கவில்லை. தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக தாம்பரத்தில் உள்ள பள்ளி ஒன்று மாணவர்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. பல பள்ளிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளன. பள்ளிகளில் ஒரு ஆரோக்கியமான மனநிலை அமைந்தால்தான் மாணவர்களால் கல்வி கற்க முடியும். கற்றல் திறனும் அதிகரிக்கும். ஆனால் ‘புத்தகங்கள் இல்லை. தண்ணீர் இல்லை’ என்ற சோகத்திலேயே மாணவர்கள் பள்ளிக்கு செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com