பெட்ரோல் பங்க்குகளில் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்தும்போது வாடிக்கையாளரிடம் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்று பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் பங்க்குகளில் கார்டு மூலம் நடைபெறும் பரிவர்த்தனைக்கான கட்டணத்தை தங்களிடம் வங்கிகள் வசூலிப்பதாகக் கூறி, கார்டுகளை ஏற்கப் போவதில்லை என பெட்ரோல், டீசல் முகவர்கள் நேற்று அறிவித்திருந்தனர். இதையடுத்து கார்டு மூலம் நடைபெறும் பரிவர்தனையில் வணிகர்களுக்கான தள்ளுபடி விகிதக் கட்டணத்தை யார் ஏற்பது என்பது குறித்து எண்ணெய் நிறுவனங்களும், வங்கிகளும் ஆலோசனை நடத்தி முடிவு செய்யவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து போராட்டத்தைத் தற்காலிகமாக ஒத்தி வைத்த பெட்ரோல் பங்க் முகவர்கள் வரும் 13ம் தேதி வரையில் கார்டுகள் ஏற்கப்படும் என அறிவித்தனர். இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், பெட்ரோல் பங்க்குகளில் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டில் நடைபெறும் பரிவர்த்தனைக்கான கட்டணம், வாடிக்கையாளர்கள் மீது சுமத்தப்படாது என்று கூறினார். மேலும் 13ஆம் தேதிக்குப் பிறகும் பெட்ரோல் பங்க்குகளில் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்துவது ஏற்றுக் கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.