தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தொடக்கத்தில் நூறு என்பதே பெரிதாகப் பார்க்கப்பட்ட நிலையில், தற்போது நாள் தோறும் ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இன்று மட்டும் ஒரே நாளில் 1927 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகரித்தாலும் உயிரிழப்புகள் தமிழகத்தில் குறைவாக இருந்ததே சற்றே ஆறுதலாக இருந்து வந்தது. ஆனால், கடந்த ஒரு வாரமாக இரட்டை இலக்கத்தில் தொடர்ச்சியாக உயிரிழப்புகள் இருந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இன்று மட்டும் 19 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதில், தனியார் மருத்துவமனைகளில் 7 பேரும், அரசு மருத்துவமனையிலிருந்து 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா நோய்த் தொற்றால் உயிரிழப்புகளில் பெரும்பாலானவர்களுக்கு நோய்த் தொற்றின் பாதிப்பு கடுமையாகவோ அல்லது இணை நோய்களின் தாக்கமோ அதிகமாக இருக்கும். மிகவும் அரிதாக ஒரு சிலர் மட்டும்தான் கொரோனா தொற்று இருந்தாலும் எவ்வித நோய் அறிகுறிகளும் இல்லாமல் உயிரிழந்தனர்.
ஆனால், கடந்த சில நாட்களாக வெளியாகி வரும் தகவல்கள் மிகவும் வருத்தம் தரும் வகையில் உள்ளன. அதாவது, கொரோனா நோய்த் தொற்றும் உறுதி செய்யப்பட்டும் எவ்வித நோய் அறிகுறியும் இல்லாதவர்களின் உயிரிழப்பு அதிகரித்த வண்ணம் உள்ளதுதான் சற்றே அச்சமூட்டும் வகையில் இருக்கின்றது. ஜீன் 6 ஆம் தேதியிலிருந்து இன்று வரை 5 நாட்களில் 23 பேர் இணை நோய்கள் இல்லாமல் உயிரிழந்துள்ளனர்.
இதில், ஜூன் 6ம் தேதி 8 பேரும், 7ம் தேதி 3 பேரும், 8ம் தேதி 3 பேரும், 9ம் தேதி 5 பேரும், இன்று 4 பேரும் எவ்வித நோய் அறிகுறியும் இல்லாமல் உயிரிழந்துள்ளனர்.