மழையின்போது பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது தொடர்பாக ஆட்சியர்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
மழை பெய்யும் காலங்களில் தற்போது அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கின்றனர். இந்நிலையில் மழை விடுமுறை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், மழை பெய்தால் இனி உடனடியாக பள்ளிகளுக்கு விடுமுறை விடக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மழையால் வெள்ளம் ஏற்படும் சூழல் ஏற்பட்டால் மட்டுமே பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகள் தொடங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன் மழை விடுமுறை தொடர்பாக முடிவெடுக்கலாம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மழை காரணமாக கல்வி மாவட்ட அளவில் அல்லது ஊராட்சி அளவில் மட்டுமே விடுமுறை விடலாம். மழையால் பாதிக்கப்படும் பகுதிக்கு மட்டுமே விடுமுறை அறிவிக்க வேண்டும். திருவிழா போன்றவற்றிற்கு ஊள்ளூர் விடுமுறை விடும்போது அதனை ஈடுசெய்யும் பணி நாளையும் சேர்த்து அறிவிக்க வேண்டும். விடுமுறை காரணமாக பாடத்திட்டம் ஏதும் பாதிக்காத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.