3 மாதங்களாக சம்பளம் வழங்கப்படாததை அடுத்து, தூய்மை பணியாளர்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகராட்சிக்கு உட்பட்டு 33 வார்டுகளில் 54 பேர் நிரந்தர தூய்மை பணியாளர்களாக பணி புரிந்து வருகின்றனர். இவர்களுக்கு 3 மாதங்களாக பணி ஊதியம் வழங்கப்படாமல் இழுக்கடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று காலை ஆரணி நகராட்சியில் சம்பளம் இன்றி பாதிக்கப்பட்ட துப்புரவு பணியாளர்கள் அனைவரும் சம்பளம் கேட்டு நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.
பின்னர் அலுவலகத்தை முற்றுகையிட்ட துப்புரவு பணியாளர்களிடம் சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள், ஓரிரு நாட்களில் உங்களுக்கு சம்பளம் வழங்க வழிவகை செய்யப்படும் என்று கூறி உறுதியளித்ததின் பேரில் முற்றுகையில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.