ஏடிஎம் கொள்ளைகளை தடுக்க ரோந்துப் பணியை தீவிரப்படுத்தினால் மட்டும் போதாது; கொள்ளையில் ஈடுபடும் கொள்ளையர்களையும் கண்காணித்து விழிப்புடன் செயல்பட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
கோவை பீளமேட்டில் ஏடிஎம் கொள்ளை வழக்கில், ஜூல்பிகர் என்ற இளைஞர் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் அடைக்க கோவை மாகர காவல் ஆணையர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி ஜூல்பிகரின் சகோதரர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம், நீதிபதி எஸ். ராமதிலகம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜூல்பிகர் மீது ஏராளமான கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையேற்று குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரிய மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். மேலும், பண மதிப்பு நீக்க நடவடிக்கைகளுக்குப் பின், பொதுமக்கள் நம்பியுள்ள ஏடிஎம்களை குறிவைத்து நடக்கும் கொள்ளை சம்பவங்களை தடுக்க, காவல் துறையினர் ரோந்துப்பணியை தீவிரப்படுத்தினால் மட்டும் போதாது, கொள்ளையில் ஈடுபடும் கொள்ளையர்களையும் கண்காணித்து விழிப்புடன் செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.