மதுரையில் மாநகராட்சி நகர்ப்புற சுகாதார நிலையத்தில், பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காததால் உயிரிழந்ததாக புகார் எழுந்துள்ளது.
மதுரை புதூர் பகுதியைச் சேர்ந்த மணிமுத்து என்பவரின் மனைவி சக்திகாளி. நிறைமாத கர்ப்பிணியான இவர், புதூர் பகுதியில் உள்ள மாநகராட்சி நகர்ப்புற சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக நேற்று மதியம் அனுமதிக்கப்பட்டு உள்ளார். திடீரென கர்ப்பிணியின் உடல்நிலை மோசமானதை தொடர்ந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மாநகராட்சி நகர்ப்புற சுகாதார நிலையத்தில் இரவு பணியில் மருத்துவர் இல்லாதநிலையில், பணியில் இருந்த செவிலியர்கள் தாக்கியதன் காரணமாகவே கர்ப்பிணி உயிரிழந்ததாகவும், 108 ஆம்புலன்ஸ் தர மறுத்ததாகவும் கர்ப்பிணியின் கணவர் புகார் தெரிவித்துள்ளார். கர்ப்பிணிக்கு இரத்தப்போக்கு ஏற்பட்டதால், வேறு மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறோம், என குடும்பத்தினர் கேட்டும் செவிலியர்கள் அழைத்து செல்ல அனுமதிக்காமல் மருத்துவமனை கதவை பூட்டி வைத்துவிட்டதாகவும் புகார் தெரிவித்துள்ளனர். குடும்பத்தினர் அளித்த புகாரைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.