பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் எந்தவித அரசியல் அழுத்தமும் இல்லை எனக் கோவை எஸ்.பி பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் வசித்து வரும் திருநாவுக்கரசு என்பவருக்கு, அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணுடன் ஃபேஸ்புக்கில் அறிமுகம் ஏற்பட்டது. தனது நண்பர்களிடம் அறிமுகம் செய்து வைப்பதாக கூறிய திருநாவுக்கரசு, அந்தப் பெண்ணை கடந்த மாதம் 12-ஆம் தேதி காரில் அழைத்துச் சென்றதாக தெரிகிறது. காரில் ஏறிக் கொண்ட நண்பர்கள், அந்தப் பெண்ணை தங்களின் செல்போனில் ஆபாசமாக படம்பிடித்து அதை வைத்து அவரிடமிருந்த நகையை மிரட்டி வாங்கியதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண், பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்த புகாரில் விசாரணை நடத்திய காவல்துறையினர், சதீஷ், சபரிராஜன், வசந்தகுமார் ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த செல்போனில் 40-க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச வீடியோக்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் திருநாவுக்கரசு திருப்பதி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார். இந்தக் கும்பலால் மேலும் பல இளம்பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த விவகாரத்தில் அரசியல் அழுத்தம் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்நிலையில் பேட்டியளித்து கோவை எஸ்.பி பாண்டியராஜன், “பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைச் சம்பவம் தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பாலியல் வன்கொடுமை புகார் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவல்துறை சார்பில் முறையான விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், பாதிக்கப்பட்டவர்கள் புகார் தந்தால் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கும். வீடியோவிலுள்ள நபர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கில் அரசியல் அழுத்தம் இல்லை. காவல்துறை கூடுதல் ஆதாரங்களை சேகரிக்கிறது. குற்றம் செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.