ஜனநாயக நாட்டில் எந்த ஒரு கட்சியிலும் இது போன்ற கீழ்த்தரமான பொதுக்குழு நடக்கவில்லை என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் உள்ள தனியார் மண்டபத்தில் மாற்றுக் கட்சியிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஓபிஎஸ் அணியில் இணைந்தனர். மேலும் ஈபிஎஸ் அணியில் இருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன் இன்று ஓபிஎஸ் அணியில் இணைந்தார். அதனைத்தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவியும் வழங்கினார் ஓபிஎஸ்.
ஈபிஎஸ் அணியிலிருந்து ஓபிஎஸ் அணிக்கு மாறிய மைத்ரேயன் நிகழ்ச்சியில் பேசிய போது, ஜெயலலிதா அவர்களின் அரசியல் வாரிசு ஓபிஎஸ் அவர்கள் என புகழாரம் சூட்டினார். “2017 ஆம் ஆண்டு அண்ணன் ஓபிஎஸ் அவர்கள் தர்மயுத்தம் தொடங்கிய போது அவருடன் இருந்தேன், யானைக்கும் அடி சறுக்கும், எனக்கு புத்தி பேதலித்து போனது வேலியை தாண்டிய வெள்ளாடாக மாறினேன், இபிஎஸ் அணியில் சேர்ந்து 108 நாட்களில் மீண்டும் ஓபிஎஸ் அணிக்கு திரும்பி உள்ளேன்.
எனக்கு உடல்நிலை சரியில்லாத போதும் கூட தொலைபேசியில் அழைத்து விசாரித்தவர் அண்ணன் ஓபிஎஸ். அனைவரையும் ஒருங்கிணைத்து கட்சியை வழிநடத்தும் திறமை அண்ணன் ஓபிஎஸ் அவர்களுக்கு மட்டும் தான் இருக்கிறது” என மைத்ரேயன் பேசினார்.
பின்னர் பேசிய ஓபிஎஸ், “எம்ஜிஆர் கட்சியை உருவாக்கிய போது அவர் விதித்த சட்ட விதிகளை போல் மற்ற கட்சிகளின் சட்ட விதிகள் இல்லை. தலைமை பொறுப்பை தொண்டர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என சட்ட விதிகளை உருவாக்கியவர் எம்ஜிஆர். அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பதவி தான் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி. இதனை தேர்தல் அதிகாரி ஏற்றுக்கொண்டார். அதற்கு ஆதாரமாக 2026 ஆண்டு வரை வெற்றி படிவம் வழங்கினார்கள் தேர்தல் அதிகாரிகள்.
ஜனநாயக நாட்டில் எந்த ஒரு கட்சியிலும் இது போன்ற கீழ்த்தரமான பொதுக்குழு நடக்கவில்லை. செயலாளர் பதவிக்கு குறைந்தது 10 மாவட்ட செயலாளர்கள் முன் மொழிய வேண்டும். சர்வாதிகார எண்ணமும் தலைமை பொறுப்பில் இருக்கக் கூடியவர்களுக்கு வரக்கூடாது என்பதற்காக தான் இது போன்ற சட்ட விதிகளை எம்ஜிஆர் அவர்கள் உருவாக்கினார்கள். ஆனால் அதனை எல்லாம் மதிக்காமல் தற்போது நடைபெற்று வருகிறது” என குற்றம் சாட்டினார் ஓபிஎஸ். அதற்காகத்தான் தற்போது நடைபெறக்கூடிய தர்மயுத்தம், தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் அதை தர்மமே வெல்லும் என்பதை மீண்டும் தெரிவித்தார்.