மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை கிடையாது என தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என அம்மாநில அரசு தெரிவித்திருந்த நிலையில் சி.வி.சண்முகம் "புதிய தலைமுறைக்கு" அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் அணை கட்டுவதற்கான பணிகளில் கர்நாடக அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்கான ஆரம்பகட்ட ஆய்வு நடத்த கர்நாடக அரசின் சார்பில் மத்திய நீர்வளத்துறை ஆணையத்திடம் அனுமதி கோரப்பட்டிருந்தது. அணை கட்ட தமிழகம் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டபோது, ஆய்வுக்கு மட்டும் தான் அனுமதி அளிக்கிறோம், அணைக்கு அல்ல என்று மத்திய அரசு பதில் அளித்தது. இதைத்தொடர்ந்து மேகதாது அணை தொடர்பான செயல் திட்ட வரைவு அறிக்கையை மத்திய நீர்வளத்துறை ஆணையத்திடம் கர்நாடக அரசு தாக்கல் செய்தது.
அணை அமையும் இடம், அணைக்கான திட்ட மதிப்பீடு, அணையின் பலன்கள் உள்ளிட்ட தகவல்களை உள்ளடக்கிய இந்த வரைவு அறிக்கைக்கு மத்திய நீர்வளத்துறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. குடிநீர் தேவை மற்றும் மின்சார உற்பத்திக்காக காவிரியின் குறுக்கே அணைகட்டுவதாக கர்நாடக தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. தற்போது வரைவு அறிக்கைக்கு ஒப்புதல் பெற்றுவிட்டதால், இறுதி அறிக்கை தயாரிக்கும் பணியில் கர்நாடக அரசு ஈடுபடும் எனத் தெரிகிறது. அதற்கும் மத்திய அரசின் ஒப்புதலை அவர்கள் பெற்றுவிட்டால், மேகதாதுவில் அணை அமைவதை தடுக்க இயலாது.
இந்நிலையில் கர்நாடக அரசின் வரைவு திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில் அணைக்கு மத்திய நீர் ஆணையம் அளித்த அனுமதிக்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக டெல்லியில் அளித்த பேட்டியில் " பேச்சுவார்த்தை என கூறிவிட்ட அணைக் கட்ட ஒப்புதலுக்கு அனுப்பியதால், கர்நாடக அரசுடனான பேச்சுவார்த்தை என்பது அர்த்தமற்றதாகிவிட்டது. காவிரி விவகாரத்தில் கர்நாடாக அரசு மீண்டும் மீண்டும் அரசியல் செய்கிறது. மேலும் மேகதாது விவகாரத்தில் மத்திய நீர்வள ஆணையம் தனது அதிகாரத்தை மீறி உள்ளது" என்று சி.வி.சண்முகம் குற்றஞ்சாட்டியுள்ளார்