மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், துரதிஷ்டவசமாக அவர் உயிரிழந்து விட்டதாகவும் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய மருத்துவ சங்கத்தின் மாநில தலைவர் டி.என். ரவிசங்கர் தலைமையில் மருத்துவர்கள், சென்னையில் இன்று செய்தியாளார்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய மருத்துவர்கள், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்டச் சிகிச்சையில் எந்த தவறும் இல்லை, 31 டாக்டர்கள் அவருக்குச் சிகிச்சை அளித்தனர் எனவும் தெரிவித்தனர். மருத்துவரீதியாக எந்த குறையும் இன்றி சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், உடல் நலம் தேறி வந்த நிலையில் ஜெயலலிதாவுக்கு டிசம்பர் 4 ஆம் தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகவும் அவர்கள் கூறினர்.
நோயாளிக்கு என்ன விதமான சிகிச்சை அளிக்கப்பட்டது என்பது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேட்டாலும், அதற்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.