அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா மீதான விசாரணை அறிக்கை மீது எந்த இறுதி முடிவும் எடுக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஓய்வுபெற்ற நீதிபதி பொன் கலையரசன் தலைமையிலான விசாரணை ஆணையத்துக்கு தடை விதிக்கக்கோரி அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்திருக்கும் மனுவில், அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்புப் பெற்ற கல்லூரிகளில் மாணவர்களின் அரியர் தேர்வுகளை ரத்து செய்ய எதிர்ப்புத் தெரிவித்ததால், தனக்கு எதிராக பழிவாங்கும் நடவடிக்கையாக விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்தை சர்வதேச அளவில் தரம் உயர்த்தும் வகையில் சீர்மிகு உயர் கல்வி நிறுவனமாக அறிவிக்க எடுத்த முயற்சிக்கு ஆளுங்கட்சி தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாகவும் சூரப்பா தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார். தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு எந்த அடிப்படை ஆதாரங்களும் இல்லை என்றும், ஆரம்பக்கட்ட முகாந்திரம் இல்லை என்றும் அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது சூரப்பா மீதான விசாரணை அறிக்கை மீது எந்த இறுதி முடிவும் எடுக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.