மேலூர் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்களும், படுக்கை வசதிகளும் இல்லை என நோயாளிகள் புகார் தெரிவித்துள்ளனர். அங்கு சேரும் மருத்துவக் கழிவுகள், மருத்துவமனையின் பின்புறத்தில் கொட்டப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மதுரை மாவட்டம் மேலூரில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையை, அந்த ஊரைச் சுற்றியிருக்கும் 80க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது அந்த ஊர்களில் மக்களை அச்சுறுத்தும் வகையில் வெவ்வேறு காய்ச்சல் பரவி வருவதால், மேலூர் மருத்துவனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால், மருத்துவர் பற்றாக்குறை நிலவுவதால் உடனடி சிகிச்சை கிடைப்பதில்லை என்பது மனக்குறையாகும்.
பொது நோயாளிகள் பிரிவில் போதிய படுக்கை வசதி இல்லாததால், ஒரே படுக்கையில் இரண்டு நோயாளிகளை படுக்க வைத்து சிகிச்சை அளித்து வருவதையும் காண முடிகிறது. இரத்த ஆய்வுக்கூடத்தில் போதிய ஆட்கள் இல்லாததால், அங்கு பரிசோதனை முடிவுகளை வாங்க மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டியிருப்பதாகவும், அதனால் கூட்டம் அதிகமாகிவிடுவதாகவும் நோயாளிகளுடன் வருவோர் கூறுகின்றனர்.
மருத்துவக்கழிவுகள் அனைத்தும் மருத்துவமனையின் பின்புறத்திலேயே கொட்டப்படுவதால் சுகாதாரச் சீர்கேடும் ஏற்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு கூறப்படுகிறது.
இதுகுறித்து சமூக ஆர்வலர் துரைசிங்கம் கூறும்போது, மேலூரில் உள்ள இந்த அரசு மருத்துவமணைக்கு சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து தினமும் பலர் சிகிச்சைக்காக வருகின்றனர். அவர்களுக்கு ஓ.பி சீட்டு வழங்கும் பகுதியில் உள்ள ஊழியர்கள் சரியான தகவல் ஏதும் அளிப்பதில்லை. மேலும் மருத்துவமனையில் காலையில் மட்டுமே மருத்துவர்கள் உள்ளனர். இதனால் பலர் சிகிச்சை பெற முடியாமல் அவதிப்படுகின்றனர். அதேபோல் மருத்துவமனை வளாகத்தில் சிகிச்சை அளிக்கப்படும் வார்டுகள் குறித்து வழி காட்டும் பதாகைகள் ஏதும் இல்லாத காரணத்தால் உரிய நேரத்தில் சிகிச்சை பெற முடியாத நிலைமை உள்ளது. போதிய குடிநீர் வசதியோ, குப்பை தொட்டி வசதியோ செய்து தரப்பட வில்லை, தற்போது டெங்கு போன்ற மர்ம காய்ச்சலுக்காக தினமும் ஆயிரக்கணக்கானோர் வரும் நிலையில் போதிய மருத்துவர்களும், அடிப்படை வசதிகளையும் செய்து தர மருத்துவமனை நிர்வாகமும், சுகாதார துறையினரும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என தெரிவித்தார்.
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டதுக்கு தற்போது மருத்துவமனை வளாகத்தில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருவதால் விரைவில் அனைத்தும் சரி செய்யப்படும் என்ற ஒன்றை வரி பதில் மட்டுமே தெரிவித்தனர்.