நெல்லை மாநகராட்சி மேயராக திமுகவை சேர்ந்த சரவணன் என்பவர் பதவி வகித்து வருகிறார். மொத்தமுள்ள 55 கவுன்சிலர்களில் 44 பேர் திமுகவை சேர்ந்தவர்கள். இந்நிலையில், கடந்த ஓராண்டுக்கு மேலாகவே நெல்லை திமுகவில் உட்கட்சி பூசல் வலுத்து வருவதால், சொந்த கட்சி கவுன்சிலர்களே மேயர் சரவணனுக்கு எதிராக இருந்தனர்.
இந்நிலையில், முதன்முறையாக மேயருக்கு எதிராக ஆளுங்கட்சி கவுன்சிலர்களே நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தனர். இந்த தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட இருந்த நிலையில், போர்க்கொடி தூக்கும் திமுக கவுன்சிலர்கள் வாக்கெடுப்பில் பங்கேற்பதை தடுக்க, அவர்களை மதுரையில் உள்ள ரிசார்ட்டில் திமுக நிர்வாகிகள் தங்கவைத்திருந்தனர் என்ற தகவல் வெளியானது.
அவர்களுடன் காங்கிரஸ், மதிமுக ஆகிய கூட்டணிக் கட்சி கவுன்சிலர்களும் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ள கவுன்சிலர்களை தொடர்பு கொள்ள முடியாத அளவிற்கு, அவர்களின் செல்போன் எண்களும் அணைத்து வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தீர்மானம் கொண்டுவந்த கவுன்சிலர்கள் யாருமே இன்று வாக்கெடுப்புக்கு வராத காரணத்தால் மேயர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் கைவிடப்பட்டது. இதனால் அவரின் பதவி தப்பியது!