கொரோனா தடுப்பூசி கொள்முதலுக்கு உலகளாவிய ஒப்பந்த புள்ளியை தமிழ்நாடு அரசு கோரிய நிலையில் எந்த நிறுவனமும் ஒப்பந்தப்புள்ளி அளிக்கவில்லை. மீண்டும் ஒப்பந்தப்புள்ளி கோரப்படும் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 18 முதல் 44 வயதினருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த போதிய அளவில் மருந்துகள் இல்லாதநிலையில், தடுப்பூசி கொள்முதலுக்கு உலகளாவிய ஒப்பந்த புள்ளி கடந்த மாதம் கோரப்பட்டது. 90 நாட்களில் 5 கோடி தடுப்பூசிகள் வழங்க தயாராகவுள்ள நிறுவனங்கள் ஜூன் 5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் கூறியிருந்தது.
உலகளாவிய ஒப்பந்தப்புள்ளிக்கான காலக்கெடு நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், எந்த ஒரு முக்கிய நிறுவனமும் தடுப்பூசி வழங்குவதற்கான ஒப்பந்தப் புள்ளியை அளிக்கவில்லை. கேரளா, தெலங்கானா, ஹரியானா ஆகிய மாநிலங்கள் வழங்கிய ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பைத் தொடர்ந்து தமிழகத்தின் அறிவிப்பையும் தடுப்பூசி நிறுவனங்கள் புறக்கணித்துள்ளன. இதனிடையே தடுப்பூசி கொள்முதலுக்கு மீண்டும் ஒப்பந்த புள்ளி கோரப்படும் என தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.