மழை நீர் வடிகால் மற்றும் சாலைகளின் நிலையைப் பார்க்கும்போது, சிங்கப்பூரைப் போல சென்னை மாறுவதற்கு சுமார் ஆயிரம் ஆண்டுகளாவது ஆகுமெனக் கருத்து கூறிய உயர்நீதிமன்ற நீதிபதிகள், அப்போது சிங்கப்பூர் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னோக்கிச் சென்றிருக்கும் எனவும் தெரிவித்தனர்.
ஜெபமணி ஜனதா கட்சியின் பொது செயலாளரும், ராஜிவ்காந்தி கொலை வழக்கின் சிபிஐ விசாரணையில் இடம்பெற்றிருந்த ஓய்வுப் பெற்ற காவல் ஆய்வாளருமான மோகன்ராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினை தொடர்ந்தார். அதில், தொலைப்பேசி இணைப்புகளுக்காக சாலையை தோண்டிவிட்டு, மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவராதது குறித்து தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மீது அளித்த புகார்களில் நடவடிக்கை எடுக்க தமிழக உள்துறை செயலாளருக்கும், சென்னை காவல் அணையருக்கும் உத்தரவிட வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார்.
ரிலையன்ஸ், ஏர்டெல், வேல்ட்டெல் நிறுவனங்களால் 2001 முதல் சென்னையில் தோண்டப்பட்ட சாலைகள் முழுமையாக சீரமைத்து தராததால், பள்ளத்தில் விழுந்தும், அதில் தேங்கிய நீரில் சிக்கி பலர் காயமடைந்தும், சிலர் மரணமடைந்தும் இருப்பதாகவும், ஆனால் அது தொடர்பாக எஸ்பிளானேடு, மயிலாப்பூர் காவல் நிலையங்களில் அளித்த புகார்களில் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தன்னுடைய மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், என்.ஷேஷசாயி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே மோசமான சாலைகளை கண்டறியவும், மழைநீர் வடிகால் கட்டமைப்பை ஆராயவும் இரண்டு வெவ்வேறு வழக்கறிஞர்களை ஆணையர்களாக நியமித்துள்ளதாக அரசு தெரிவித்தது. மேலும், 2015 இல் ஏற்பட்ட பெருவெள்ள பாதிப்பு மீண்டும் ஏற்படாது என சென்னை மாநகராட்சி உறுதியளித்துள்ளது.
இதனையடுத்து, 80% மழைநிர் வடிகால் அமைக்கப்பட்டுவிட்டது என்பது குறித்த தகவலை அறிக்கையாக தாக்கல் செய்யவும் உத்தரவிட்ட நீதிபதிகள், மோகன்ராஜ் வழக்குடன், மழைநீர் வடிகால் பராமரிப்பு வழக்கையும், சாலை பராமரிப்பு வழக்கையும் சேர்த்து விசாரிக்க முடிவு செய்தனர். சென்னையில் உள்ள பெரும்பாலான சாலைகள் மோசமான நிலையிலேயே பராமரிக்கப்படுவது குறித்தும் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். தற்போதைய பருவமழைகாலம் முடியும் வரை சாலைகள் செப்பனிடப்போவதில்லை என்றும் இதே நிலையில் போனால் தற்போதைய சிங்கப்பூரை போல மாற 1000 ஆண்டுகள் ஆகும், ஆனால் அப்போது 10000 ஆண்டுகள் சிங்கப்பூர் முன்னோக்கி சென்றுவிடும் என தெரிவித்தனர்.