சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைக்க தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, 50 கோடி ரூபாய் செலவில் நினைவிடம் கட்டுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதனை எதிர்த்து வழக்கறிஞர் எம்.எல்.ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றவருக்கு அரசு செலவில் நினைவிடம் கட்டினால் தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என அவரின் மனுவில் கூறப்பட்டிருந்தது.
இது தொடர்பான விசாரணையின் போது, உச்சநீதிமன்ற தீர்ப்பு வரும்போது ஜெயலலிதா உயிரோடு இல்லை என்பதால் மனுதாரர் கூறுவது போல ஜெயலலிதாவை குற்றவாளியாக கருத முடியாது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கடற்கரை ஒழுங்குமுறை ஆணையம் உள்ளிட்ட அனைத்து துறைகளின் அனுமதியும் பெற்று நினைவிடம் கட்டப்பட்டு வருவதாகவும், 90 சதவீத பணிகள் முடிந்து விட்டதாகவும் அரசு தரப்பில் கூறப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம், மெரினா கடற்கரையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைக்க தடையில்லை என தெரிவித்துவிட்டது. சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்புக்கு முன்பே ஜெயலலிதா இறந்ததால் தண்டனை அறிவிக்கப்படவில்லை. எனவே ஜெயலலிதாவை தண்டிக்கப்பட்ட குற்றவாளி என சொல்ல முடியாது என நீதிமன்றம் தெரிவித்துவிட்டது. இனிவரும் காலங்களில் அரசின் கொள்கை முடிவுகள் மக்களுக்கு பயளனிக்கும் வகையில் இருக்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.