“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!
IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் துவங்கி உள்ள நிலையில் கடந்த சில தினங்களாக ராமநாதபுரத்தில் உச்சிப்புளி, திருவாடானை, பரமக்குடி, பாம்பன் மண்டபம், ராமேஸ்வரம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வந்தது. இத்துடன் மீன் இனப்பெருக்க காலமும் நிலவிவந்ததால், ஏப் 15 முதல் விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாமல் இருந்தனர்.
இந்நிலையில் கடந்த 6ந் தேதி ‘மறு அறிவிப்பு வரும் வரை நாட்டுப் படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லக்கூடாது’ என மீன்வளத் துறையினர் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இருப்பினும் நேற்று வழக்கம்போல சில மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், இன்று காலை பாம்பன் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு ஒன்றாம் நிலை ஏற்றப்பட்டுள்ளது. மேலும் மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தும்படியும் மீன்வளத் துறையினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பாம்பன் தென்கடல் பகுதியில் சுமார் 50 முதல் 100 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கி உள்ளதால் கடலுக்கு அடியில் உள்ள பாறைகள் வெளியே தெரிகின்றன. இதனால் படகுகளை கரையோரங்களில் நிறுத்துவதற்கு ஒரு வித தயக்க நிலை ஏற்பட்டுள்ளதாக மீன்பிடி தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மீனவர்கள் தரப்பில் நம்மிடையே கூறும்போது, “வழக்கமாக காலை 8 மணிக்கு எல்லாம் வெள்ளப்பெருக்கு ஏற்படும். ஆனால் தற்போது பாம்பன் பகுதியில் கடல் மிகவும் அமைதியாகவும் காற்றில் வேகம் குறைந்தும் பாம்பன் தென்கடல் பகுதி உள்வாங்கியும் காணப்படுகிறது. இது இயற்கைக்கு மாறாக உள்ளதாக நாங்கள் கருதுகிறோம். பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் நிலை புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இது எங்கள் மத்தியில் ஒரு வித பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது” என்றார்.
பாம்பன் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளதால் மீனவர்கள் தங்கள் படகுகளை ஆழமான பகுதியில் நிறுத்தி உள்ளனர். மேலும், தாழ்வான பகுதியில் உள்ள மீன் கம்பெனிகளிலுள்ள உப்பு கருவாடுகளை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக மீனவர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.