என்எல்சி நிறுவனத்தில் 'கேட்' அடிப்படையில் பணி நியமனம் கூடாது - பிரதமருக்கு முதல்வர் கடிதம்
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் (என்எல்சி) 'கேட்' மதிப்பெண்கள் மூலம் பணியாட்களை தேர்வு செய்யும் முடிவினை மாற்ற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், "கடந்த காலங்களில் பணியாளர்களை தேர்வு செய்யும் போது, சுரங்க நடவடிக்கைகளுக்காக நிலங்களை வழங்கியோர் குடும்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், 'கேட்' (GATE) தேர்வு மூலம் மட்டுமே 300 பயிற்சியாளர்கள் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என தற்போது அறிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இது, அந்தத் தேர்வை எழுதாத உள்ளூர் மக்களை பெரிதும் பாதிக்கும்.
எனவே, பட்டதாரி நிர்வாகப் பயிற்சியாளர் பணிக்கு 'கேட்' மதிப்பெண்கள் அடிப்படையில் பணியாளர்களை தேர்வு செய்யும் முடிவினை மாற்றிட வேண்டும். பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடவடிக்கையின்போது என்எல்சி நிறுவனம் தகுதித் தேர்வை நடத்திட வேண்டும்" இவ்வாறு மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.