நிவர் புயல் இன்று மதியம் அதி தீவிர புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறுகையில், “நிவர் புயல் கடலூரில் இருந்து 240 கி.மீ, புதுச்சேரியில் இருந்து 250 கி.மீ, சென்னையில் இருந்து 300 கீ.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. கடந்த 6 மணி நேரத்தில் 11 கி.மீ வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. தற்போது காற்றின் வேகம் 105 முதல் 115 கி.மீ வரை இருக்கிறது.
இன்று மதியம் அதி தீவிரபுயலாக வலுப்பெறக்கூடும். வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவு புதுச்சேரிக்கு அருகே கரையை கடக்கூடும். இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவாலாக மழை பெய்யக்கூடும். அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்.
தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பரவலாக மழைபெய்யக்கூடும். ஒரு சில இடங்களில் கனமழை முதல் அதிகனமழை பெய்யக்கூடும்.
புயல் கரையை கடக்கும்போது நாகை, மயிலாடுதுறை, காரைக்கால், கடலூர், புதுவை, விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மணிக்கு 130 முதல் 145 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். ஒரு சில சமயங்களில் 155 கி.மீ வரை காற்று வீசக்கூடும். காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் 80 முதல் 90 கி.மீ வேகத்திலும் சமயங்களில் 100 கி.மீ வரை காற்று வீசக்கூடும்” எனத் தெரிவித்தார்.