மாநில நிதியமைச்சர்களை சந்திக்கிறார் நிர்மலா சீதாராமன்! -பிடிஆர் கலந்து கொள்வாரா?

மாநில நிதியமைச்சர்களை சந்திக்கிறார் நிர்மலா சீதாராமன்! -பிடிஆர் கலந்து கொள்வாரா?
மாநில நிதியமைச்சர்களை சந்திக்கிறார் நிர்மலா சீதாராமன்! -பிடிஆர் கலந்து கொள்வாரா?
Published on

2023ம் வருட பட்ஜெட் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என கருதப்படுகிறது. கோவிட் பாதிப்பிலிருந்து இரண்டு வருடங்களுக்குப் பிறகு இந்திய பொருளாதாரம் மீண்டு வரும் நிலையில், ரஷ்யா- உக்ரைன் போரால் எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்கள் விலை உலகம் முழுவதும் கடுமையாக உயர்ந்துள்ளது. எகிறும் பண வீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி பலமுறை தொடர்ச்சியாக வட்டி விகிதங்களை உயர்த்தி உள்ளது.

இத்தகைய சூழலில், பொருளாதாரம் வளர்ச்சியை அதிகரிக்கவும் அத்துடன் விரைவாக வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் துரித நடவடிக்கைகள் தேவை என கருதப்படுகிறது. மேலும் 2024ம் வருடத்திலேயே மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், இடைக்கால பட்ஜெட் மட்டுமே தேர்தலுக்கு முன் தாக்கல் செய்யப்படும். ஆகவே அடுத்த வருட நிதிநிலை அறிக்கை பொது தேர்தலுக்கு முந்தைய இறுதி பட்ஜெட் ஆக மத்திய அரசுக்கு வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை எடுக்கும் வாய்ப்பாக அமைந்துள்ளது.

இந்நிலையில், அடுத்த வருட பட்ஜெட் தொடர்பாக ஆலோசனை நடத்த, மாநில நிதி அமைச்சர்களை நாளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திக்கிறார். தமிழக அரசு சார்பாக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வார் என தகவல் அளிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் தொடர்பான ஆலோசனை நாளை டெல்லியில் நடைபெறுகிறது எனவும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நிதி அமைச்சர்கள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர் எனவும் புதிய தலைமுறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

சில மாநிலங்களில் முதல் அமைச்சர்களே நிதி துறையை தங்கள் பொறுப்பில் வைத்திருப்பதால், அந்த மாநிலங்களுக்கு பிரதிநிதிகளாக முதலமைச்சர்களே ஆலோசனையில் கலந்து கொள்கின்றனர்.


அடுத்த வருடம் தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட் தொடர்பான ஆலோசனைகளை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்ற திங்கட்கிழமை தொடங்கினார். அதற்கு முன்னரே நிதி அமைச்சக அதிகாரிகள் பட்ஜெட் பணிகள் தொடர்பான புள்ளி விவரங்கள் மற்றும் தகவல்களை திரட்டி ஆலோசனைகளில் ஈடுபட்டு வந்தனர்.


நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திங்கட்கிழமை அன்று தொழிலதிபர்களை சந்தித்து உட்கட்டமைப்பு மற்றும் பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். செவ்வாய்க்கிழமை வேளாண்துறை மற்றும் நிதித்துறை பிரதிநிதிகளை சந்தித்து அவர் ஆலோசனைகளை தொடர்ந்தார். நிதி அமைச்சக இணை அமைச்சர்கள், மற்றும் மூத்த அதிகாரிகள் இந்த ஆலோசனைகளில் கலந்து கொண்டனர்.


மாநில நிதியமைச்சர் களை சந்திக்கும்போது, தற்போதைய பொருளாதார நிலவரம் மற்றும் மாநிலங்களின் நிதி நிலை குறித்து நிர்மலா சீதாராமன் கேட்டறிவார் என கருதப்படுகிறது. நிலுவையில் உள்ள நிதித்தொகைகளை விடுவிப்பது மற்றும் ஜிஎஸ்டி வரி தொடர்பான விவகாரங்கள் குறித்து மாநில நிதி அமைச்சர்கள் கோரிக்கைகளை வலியுறுத்துவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


ஜிஎஸ்டி கவுன்சிலிங் அடுத்த கூட்டம் மதுரை நகரில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மாநில நிதி அமைச்சர்களை நிர்மலா சீதாராமன் சந்திக்கிறார். லாட்டரி, சூதாட்டம் மற்றும் பந்தயம் கட்டி விளையாடப்படும் ஆன்லைன் விளையாட்டுகள் ஆகியவற்றுக்கு 28% வரி விதிக்க வேண்டும் என பல்வேறு மாநில அரசுகள் கருதுகின்றன.


இந்த விவகாரம் குறித்து பரிந்துரைகளை அமைக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் குழு அறிக்கை தொடர்பாகவும் ஆலோசனை நடைபெறலாம் என கருதப்படுகிறது. அத்துடன் தங்களுக்கு தேவையான திட்டங்கள் மற்றும் ஒதுக்கீடுகளை 2023 நிதிநிலை அறிக்கையில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை வலியுறுத்த பல்வேறு மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளன.


- கணபதி சுப்ரமணியம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com