விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டையில் கல்லூரி மாணவிகளை தவறான பாதையில் வழிநடத்த முயன்றதாக கைது செய்யப்பட்ட நிர்மலாதேவியிடம் இரண்டாவது நாளாக சி.பி.சி,ஐ.டி விசாரணை தொடர்ந்து வருகிறது.
விருதுநகர் சிபிசிஐடி அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் ராஜேஸ்வரி தலைமையில் நேற்று தொடங்கிய இந்த விசாரணை 5 நாட்களுக்கு நடைபெற உள்ளது. புகாரளித்த நான்கு மாணவிகளிடம் பேசிய உரையாடல் ஆடியோ, வாட்ஸ்அப் குறுந்தகவல்கள் உள்ளிட்ட ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், புகாரளித்த நான்கு மாணவிகள் மற்றும் கல்லூரி நிர்வாகத்திடம் இன்று விசாரணை நடத்தப்படலாமென தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுமட்டுமின்றி, நிர்மலாதேவியின் வீட்டிலும் சோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசாரின் ஒரு குழு, தனியார் கல்லூரியில் விசாரணை மேற்கொண்டுள்ளது.
இதற்கிடையில் நீதிமன்ற அனுமதியுடன் நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்தப்படும் என்று விசாரணை அதிகாரி சந்தானம் தெரிவித்துள்ளார். நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக சந்தானம் குழுவின் முதல்கட்ட விசாரணை இன்றுடன் முடிகிறது. விசாரணைக் குழுவிடம் தகவல் தெரிவிக்க விரும்புவோர் இன்று பிற்பகல் வரை தகவல் தெரிவிக்கலாம் என்று சந்தானம் குழு கூறிய நிலையில், யாரும் தகவலோ, மனுவோ அளிக்கவில்லை. நிர்மலாவிடம் சிபிசிஐடி விசாரணை நடப்பதால் நீதிமன்ற அனுமதியுடன் அவரிடம் விசாரணை நடத்தப்படும் என்று சந்தானம் தெரிவித்துள்ளார்.