நிர்பயா நிதியில் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட 190 கோடியில் 6 கோடி ரூபாய் மட்டும் அதிமுக அரசு செலவு செய்துள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்புக் கரம் கொண்டு தடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் தொடர்ந்து பெண்களுக்கு எதிராக நடந்து வரும் குற்றங்கள் மூலம் அனைவரும் அச்சமடைந்துள்ளதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
பெண் ஒருவர் சுதந்திரமாக நள்ளிரவில் நடமாடும் நிலையே உண்மையான சுதந்திரம் என மகாத்மா காந்தி கண்ட கனவு, தற்போது பட்டப் பகலில் கூட சாத்தியமில்லாத சூழல் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நிர்பயா நிதியின் கீழ் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய 190 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையிலும், அதிலிருந்து வெறும் 6 கோடி ரூபாயை மட்டுமே அதிமுக அரசு செலவழித்துள்ளதாக ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.