முரட்டு குணம் கொண்டு சங்கர் யானையை, கும்கி யானையாக மாற்றும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள சேரம்பாடி பகுதியில் கடந்த ஆண்டு தந்தை மகன் உட்பட மூவரை அடுத்தடுத்து கொன்ற காட்டு யானை சங்கர். முரட்டு குணம் கொண்ட இந்த யானை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நீண்ட போரட்டத்திற்குப் பிறகு பிடிக்கப்பட்டு தெப்பக்காடு யானைகள் முகாமில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து சங்கர் யானை முழு வளர்ப்பு யானையாக மாற்றம் பெற்றுள்ள நிலையில், பாகன்கள் தற்போது அதை கும்கி யானையாக மாற்றும் யிற்சிகளை அளிக்கத் தொடங்கியுள்ளனர். சங்கர் யானையும் பாகன்களின் கட்டளைகளுக்கு ஏற்ப செயல்பட்டு வருகிறது.
ஆரம்பத்தில் மனிதர்களை கண்டால் தாக்கும் முரட்டு குணம் கொண்ட சங்கர் தற்போது, அமைதியான குணத்தோடு முகாமில் வலம் வருகிறது. இதை முழு கும்கி யானையாக மாற்றுவதற்கான பணிகளை வனத்துறையினர் மேற்கொண்டு வருகிறார்கள்.