மயக்க ஊசி செலுத்தப்பட்ட சங்கர் யானைக்கு மயக்கம் தெளியும் வரை பாதுகாத்து நின்று யானைகள் அழைத்துச் சென்றது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
நீலகிரி மாவட்டம் சேரம்பாடியில் மூன்று பேரைக் கொன்ற சங்கர் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க கடந்த நான்கு நாட்களாக வனத்துறையினர் எடுத்த முயற்சிகள் அனைத்தும் வீணாகின. இந்நிலையில் 5-ஆவது நாளான நேற்று புஞ்சக் கொல்லி பகுதியில் அந்த யானை, கூட்டத்துடன் நிற்பதை வனத்துறையினர் கண்டறிந்தனர்.
நீண்ட முயற்சிக்கு பிறகு வன கால்நடை மருத்துவர்கள் அதற்கு மயக்க ஊசி செலுத்தினர். அதனைத்தொடர்ந்து 45 நிமிடத்தில் மீண்டும் மயக்க ஊசி செலுத்த முயன்றபோது, கூட்டத்தில் இருந்த 2 பெண் யானைகள் வனத்துறையினரை அருகில் நெருங்கவிடவில்லை. சங்கர் யானைக்கு மயக்கம் தெளியும் வரை பெண் யானைகள் பாதுகாத்து நின்றன.
மயக்கம் தெளிந்த பின்னர் அதனை அழைத்துக்கொண்டு அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றுவிட்டன. மயக்க ஊசி செலுத்தியும் யானையை பிடிக்க முடியாததால் வனத்துறையினர் ஏமாற்றம் அடைந்தனர்.