நீலகிரி: பூத்துக் கொட்டும் மூங்கில் அரிசி... சேகரிக்கும் பணியில் பழங்குடியின மக்கள்!

நீலகிரி: பூத்துக் கொட்டும் மூங்கில் அரிசி... சேகரிக்கும் பணியில் பழங்குடியின மக்கள்!
நீலகிரி: பூத்துக் கொட்டும் மூங்கில் அரிசி... சேகரிக்கும் பணியில் பழங்குடியின மக்கள்!
Published on

நீலகிரி மாவட்டம் கூடலூரில் 40 ஆண்டுகளுக்கு பிறகு ஏராளமான இடங்களில் மூங்கில் அரிசி பூத்துள்ளது. மருத்துவ குணம் கொண்ட மூங்கில் அரிசி கிலோவிற்கு 800 ரூபாய் வரை விற்பனையாவதால் உள்ளூர் பழங்குடியின மக்கள் அதனை சேகரிக்கும் பணிகளில் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர்.

நீலகிரி மூங்கில் செடிகளின் ஆயுட்காலம் 40 ஆண்டுகள் மட்டுமே. 40 ஆண்டுகள் முடிந்த மூங்கில் செடிகள் பூ பூக்க துவங்கும். பூ பூத்த சில வாரங்களில் அதில் இருந்து அரிசிகள் கொட்டத் துவங்கும். பின்னர் குறிப்பிட்ட நாட்களில் மூங்கில் செடிகள் காய்ந்து அழிந்து போகும்.

இந்த மூங்கிலரிசி மருத்துவ குணம் அதிகம் கொண்டது. இதில் மாவுச்சத்துடன் புரதம், மெக்னீசியம், காப்பர், சிங்க் உள்ளிட்ட பல்வேறு சத்துகள் இருக்கின்றன. மூங்கிலரிசி சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த உணவாக இருப்பதோடு, மூட்டுவலி, முட்டியில் நீர் கோத்துக்கொள்ளுதல் போன்றவற்றுக்கும் நல்ல மருந்து என பழங்குடி மக்கள் கூறுகிறார்கள்.

இந்நிலையில் நீலகிரி மாவட்டம் கூடலூர் வனப்பகுதிகளிலும், ஊரை ஒட்டியும் தற்போது 50 சதவிகித மூங்கில் செடிகளின் ஆயுட்காலம் முடிந்துள்ளது. இதனால் சில வாரங்களுக்கு முன் மூங்கில் செடிகள் பூக்கத் துவங்கியுள்ளன. இந்த செடிகளில் இருந்து மூங்கிலரிசி கொட்டத் துவங்கியுள்ளதால் அவற்றை சேகரிக்கும் பணியில் பழங்குடி மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

பாரம்பரியமாக பழங்குடியின மக்கள் தங்கள் உணவில் மூங்கிலரிசியை பயன்படுத்துகிறார்கள். இவர்களிடம் இருந்து வெளிமாவட்டத்தினர் வந்து மூங்கிலரிசியை வாங்கிச்செல்கிறார்கள். மூங்கிலரிசி நெல்லாக கிலோ 500 ரூபாய்க்கும், அரிசியாக கிலோ 800 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரையிலும் விற்கப்படுகிறது.

மருத்துவ குணங்களை கொண்ட மூங்கில் அரிசி சீசன் இன்னும் ஒரு சில வாரங்களில் முடிந்து விடும் என்பதால் அவற்றை பழங்குடியினர் ஆர்வத்துடன் சேகரித்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com