நீலகிரி மாவட்டம் பந்தலூரில் இரண்டு நாட்களில் மர்மமான முறையில் அடுத்தடுத்து 3 சிறுத்தைக் குட்டிகள் உயிரிழந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ள மேங்கோரேஞ் பகுதியில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் நேற்று ஒரு வயது மதிக்கத்தக்க ஆண் சிறுத்தை ஒன்று உயிரிழந்து கிடந்ததை வனத்துறையினர் கண்டறிந்தனர்.
இதையடுத்து சிறுத்தை குட்டியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில் அதன் கழுத்துப் பகுதியில் காயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வேறு ஒரு சிறுத்தை தாக்கியதில் சிறுத்தை குட்டி இறந்திருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் நேற்று சிறுத்தை குட்டி இருந்த பகுதியில் மேலும் இரண்டு சிறுத்தை குட்டிகள் உயிரிழந்து கிடந்ததை இன்று காலை வனத்துறையினர் கண்டறிந்தனர். ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் சிறுத்தை குட்டிகள் இறந்து கிடந்தது. இறந்த ஒரு குட்டிக்கு உடல் பகுதியில் காயம் உள்ள நிலையில் மற்றொரு குட்டிக்கு காயம் இருக்கிறதா என கண்டறிய முடியவில்லை.
பிரேத பரிசோதனைக்கு பின்னரே சிறுத்தை குட்டிகளின் உயிர் இறப்பிற்கான காரணம் தெரியவரும் என வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பந்தலூரில் இரண்டு நாட்களில் 3 சிறுத்தை குட்டிகள் உயிரிழந்திருப்பது குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.