முதுமலை வனப்பகுதி சாலையின் இருபுறங்களிலும் மேய்ந்து கொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான மான்களை சுற்றுலா பயணிகள் மிக அருகில் கண்டு ரசித்தனர்.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில், கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக பெய்த தொடர் மழை காரணமாக வனப்பகுதி முழுவதும் பசுமையாக காணப்படுகிறது. சாலையின் இரு புறங்களிலும் வளர்ந்துள்ள புற்களை மேய்வதற்காக நூற்றுக்கணக்கான மான்கள் வருகின்றன.
அவ்வாறு வரக்கூடிய மான்கள் சாலை ஓரங்களில் நின்று மேய்ச்சலில் ஈடுபடுகின்றன. நூற்றுக்கணக்கான மான்களை சுற்றுலா பயணிகள் ஒரே நேரத்தில் மிக அருகில் கண்டு ரசித்துச் செல்கின்றனர். அதேபோல மேய்ச்சலுக்குப் பிறகு சாலையோரங்களில் உள்ள புல்தரையில் மான்கள் படுத்து ஓய்வெடுக்கும் காட்சிகளையும் அதிகமாக பார்க்க முடிகிறது.
மான்களும் சுற்றுலா பயணிகளை கண்டு அச்சமடையாமல், இயல்பாக மேய்ச்சலில் ஈடுபட்டு வருகின்றன. பசுமையான வனப்பகுதிக்கு நடுவே புள்ளி மான்கள் மேய்ச்சலில் ஈடுபடும் காட்சி பார்க்க மிகவும் அழகாக இருக்கிறது.