தஞ்சையில் மூன்று வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
கிலாபத் இயக்கத்தை சேர்ந்த அப்துல் காதர் என்பவர், ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறி, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அவரை கைது செய்து கடந்த ஆண்டு சிறையில் அடைத்தனர்.
அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் 4 மாதங்களுக்கு முன்பு, மண்ணை பாபா என்பவரை கைது செய்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அதில், தஞ்சையில் சேர்ந்த மூன்று பேருடன் அவருக்கு தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, தஞ்சை கீழவாசல் பகுதியில் வசித்து வரும் இருசக்கர வாகன மெக்கானிக் அப்துல் காதர், முகமது யாசின், காவேரி நகர் பகுதியை சேர்ந்த அகமது ஆகியோரிடம் விசாரணை நடைபெற்றது.
மேலும், அவர்களது வீடுகளிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. சில செல்போன்கள், ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை அதிகாரிகள் எடுத்துச் சென்றதாக தெரிகிறது. இதற்கிடையே சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் வரவழைக்கப்பட்டதால், போராட்டத்தை கைவிட்டு அப்பகுதி மக்கள் திரும்பிச் சென்றனர்.