கோவையில் இரு வேறு இடங்களிலும், நாகை மாவட்டம் நாகூரில் ஓரிடத்திலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவை உக்கடம் பகுதியில் உள்ள ஜிஎம் நகர் பகுதியைச் சேர்ந்த சமீர் என்பவரது வீட்டிலும், லாரிபேட்டை பகுதியைச் சேர்ந்த சவுருதீன் என்பவரது வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே என்ஐஏவின் சோதனைகளுக்கு உள்ளானவர்களுடன் இவர்கள் இருவரும் அடிக்கடி தொலைப்பேசி மூலம் தொடர்பில் இருந்தார்கள் என்பதால் சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை நடைபெறுவதாகத் தெரிகிறது. தற்போது சோதனைக்குள்ளாகியிருக்கும் சவுருதீன் என்பவர் ஒரு மாதத்திற்கு முன்புதான் கோவையில் குடியேறியதாக தெரிகிறது.
இதற்கு முன் சென்னையில் வசித்த அவருக்கு சென்னையில் இருக்கும் தொடர்புகள் குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது. பயங்கரவாத அமைப்புகளுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகத்தின் அடிப்படையில் கோவையில் தேசிய புலனாய்வு முகமை நாற்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் ஏற்கெனவே சோதனை நடத்தியிருக்கிறது. இந்து முன்னணி பிரமுகர் கொலை, முக்கிய இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்த்த சதித்திட்டம் தீட்டியது உள்ளிட்ட சந்தேகங்களின் அடிப்படையில் சோதனைகள் நடத்தப்பட்டன. அதேபோல, நாகை மாவட்டம் நாகூரிலும் ஒருவரின் வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும், தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்திலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.