தீவிரவாத அமைப்பிற்கு நிதி மற்றும் ஆட்கள் சேர்த்ததாக என்.ஐ.ஏ போலீஸால் கைது செய்யப்பட்ட 16 பேருக்கும் 8 நாள் போலிஸ் காவலில் வைத்து விசாரிக்க பூவிருந்தவல்லியில் உள்ள தேசிய புலனாய்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிரவாத செயலில் ஈடுபட அன்சாருல்லா என்ற அமைப்பிற்கு ஆட்கள் மற்றும் நிதி திரட்டியதாக கடந்த வாரம் நாகையில் அசன் அலி, ஹாரிஸ் முகமது ஆகிய இரண்டு பேரை என்.ஐ.ஏ போலீசார் கைது செய்தனர். இதன் தொடர்ச்சியாக டெல்லியில் பதுங்கியிருந்த 14 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்ட 16 பேரிடமும் 10 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்ய பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ. போலீசார் இன்று மனு அளித்தனர். இதனை விசாரித்த நீதிபதி செந்தூர்பாண்டியன் 8 நாள் போலிஸ் காவலில் விசாரணை செய்து வரும் 26 ஆம் தேதி மாலை 5 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.