இதுவரை ஆண்களே பெரும்பாலும் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை பறிகொடுத்து தற்கொலை செய்துவந்த நிலையில், 2 குழந்தைகளின் தாய் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது இந்த விவகாரம் மீண்டும் அனல் பறக்க விவாத்தை கிளப்ப காரணமாகி உள்ளது.
ஆன்லைன் ரம்மியால் ஏற்பட்ட உயிரிழப்புகள் ஏராளம்... இன்று வரை அது தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. சொந்தப் பணத்தை இழந்தது ஒருபுறம் கடன் வாங்கி பணத்தை இழந்தது மறுபுறம் என மன அழுத்தத்திற்கு ஆளாகி தற்கொலைகள் நடக்கின்றன. கடந்த காலங்களில் ஆன்லைன் ரம்மியால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து சற்று பின்னோக்கி பார்த்தால் அதிர்ச்சியடைய வைக்கிறது.
இதுவரை ஆண்களே பெரும்பாலும் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை பறிகொடுத்து தற்கொலை செய்துவந்த நிலையில், 2 குழந்தைகளின் தாய் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது இந்த விவகாரம் மீண்டும் அனல் பறக்க விவாத்தை கிளப்ப காரணமாகி உள்ளது.
சென்னையை சேர்ந்த பவானி- பாக்யராஜ் தம்பதிக்கு 3 மற்றும் ஒரு வயதில் மகன்கள் உள்ளனர். ஆன்லைன் ரம்மியில் ஆர்வம் காட்டி வந்த பவானி, சிறுக சிறுக அதில் பணம் சம்பாதித்துள்ளார். பெரிய அளவில் ஆன்லைன் ரம்மியில் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்ட பவானி, கணவரின் கண்டிப்பை மீறி அதிக அளவிலான பணத்தை அதில் முதலீடு செய்துள்ளார்.
தனது 20 சவரன் நகைகளை அடமானம் வைத்தும், சில நகைகளை விற்றும் ஆன்லைன் சூதாட்டத்தை தொடர்ந்துள்ளார். தனது இரு சகோதரிகளிடமும் தலா ரூ.1.5 லட்சம் கடன் பெற்று அதையும் ஆன்லைன் ரம்மியில் தொலைத்தார். தொடர் பண இழப்பால், ஞாயிறு இரவில், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். தற்கொலை தொடர்பாக மணலி புதுநகர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆன்லைன் சூதாட்டத்தால் பல உயிர்கள் பறிபோகும்நிலையில், இதனை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. பல நாடுகளில் சூதாட்டத்திற்கு அனுமதி இருக்கும்போதிலும், ஆன்லைன் சூதாட்டத்திற்கு அனுமதியில்லை. ஐக்கிய அரபு அமீரகம், வட கொரியா, ஜப்பான், கம்போடியா, கத்தார் ஆகிய நாடுகள் சூதாட்டத்தை தடை செய்துள்ளன.
இதுகுறித்து புதிய தலைமுறையின் நியூஸ் 360 டிகிரி நிகழ்ச்சியில் தனது கருத்துகளை பகிர்ந்துகொண்ட போதை தடுப்பு மருத்துவ பேராசியரான அருண் கந்தசாமி, “முதலில் உங்களை எப்படி உள்ளே இழுப்பது என்பதை திட்டமிட்டே ஆன்லைன் விளையாட்டு கட்டமைக்கப் பட்டிருக்கும். தொடர்ந்து தோல்வி வந்து நீங்கள் விளையாடாமல் இருந்தால், ஒரு ஆட்டம் உங்களுக்கு இலவசம் என்று கூறி மீண்டும் உங்களை விளையாட வைப்பார்கள்.
பணத்தை கடன் வாங்கி முதலீடு செய்து இழந்துவிட்டால், குடும்பத்திடம் சொல்லி விட வேண்டும். தனக்குள்ளே வைத்து சமாளிக்க நினைத்தால், மன அழுத்தம் அதிகமாகி தற்கொலை எண்ணங்கள் தோன்ற ஆரம்பித்துவிடும். குடும்பத்தினர் நிலைமையை புரிந்துகொண்டு, கடன் வாங்கியவர்களிடம் எல்லாம் கால அவகாசம் கேட்டு, நேர்மையாக சம்பாதித்து கடனை அடைக்க வேண்டும். மீண்டும் ஆன்லைன் விளையாட்டு பக்கம் வந்துவிடக்கூடாது” என்று தெரிவித்தார்.
இதுதொடர்பாக புதிய தலைமுறையில் 360 டிகிரி நிகழ்ச்சியில் முன் வைக்கப்பட்ட கருத்துகளை முழுமையாக இந்த வீடியோவில் பார்க்கலாம்.