திருமணமாகி நான்கு மாதங்களான நிலையில் மனைவியும், கணவனும் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த நரசிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் லோகேஸ்வரி(26). இவருக்கும் எளாவூர் பகுதியைச் சேர்ந்த அன்பு (36) என்பவருக்கும் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 15-ஆம் தேதி மாலை 5 மணியளவில் லோகேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து லோகேஸ்வரியின் தாய் தேவி, ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் அன்பு மீது வரதட்சணை கொடுமை புகாரளித்தார்.
இந்த நிலையில் ஆந்திர மாநிலம் தடா பகுதியில் உள்ள தனியார் விடுதியில் லோகேஸ்வரியின் கணவர் அன்பு நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தடா போலீசார் அன்புவின் உடலை கைப்பற்றி சூலூர் பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மனைவி யோகேஸ்வரியினி தற்கொலை தொடர்பாக தன்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற பயத்தில் அன்பும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது. திருமணமாகி நான்கு மாதங்களான நிலையில் மனைவியும் கணவனும் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - +91 44 2464 0050, +91 44 2464 0060)