புத்தாண்டு: மதுபோதையில் வாகனங்களை ஓட்டினால் கடும் நடவடிக்கை- கோவை எஸ்.பி எச்சரிக்கை

புத்தாண்டு: மதுபோதையில் வாகனங்களை ஓட்டினால் கடும் நடவடிக்கை- கோவை எஸ்.பி எச்சரிக்கை
புத்தாண்டு: மதுபோதையில் வாகனங்களை ஓட்டினால் கடும் நடவடிக்கை- கோவை எஸ்.பி எச்சரிக்கை
Published on

புத்தாண்டை முன்னிட்டு குடிபோதையில் வாகனங்களை இயக்குவோர் மீது ஐபிசி பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கோவை மேட்டுப்பாளையம் சாலை கவுண்டம்பாளையம் சோதனைச்சாவடியை ஆய்வு செய்த கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம், அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகளுக்கு முறையான போக்குவரத்து விதிகளை கடைபிடிக்குமாறு அறிவுரை வழங்கினார்.

மேலும் தனியார் பேருந்துகளில் ஏறி ஆய்வு மேற்கொண்டு நடத்துனர் ஒருவரைத் தவிர வேறு யாரும் படியில் நின்று நடத்துனர் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என்றும் உத்தரவிட்டார். முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,

"புத்தாண்டை பாதுகாப்பாக கொண்டாட மக்கள் ஒத்துழைக்க வேண்டும். அரசின் விதிமுறைகளை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். கோவை மாவட்டத்தில் புத்தாண்டு பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள 1,300 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மது போதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் உரிய அனுமதி இன்றி மதுபானங்கள் விற்பவர்கள் ஆகியோர் ரோந்து வாகனங்கள் மூலம் கண்காணிக்கப்படுவர்.

அதிவேகமாக விபத்து ஏற்படும் வகையில் வாகனங்களை இயக்குவோர் மீது ஐபிசி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும். 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் இருசக்கர வாகனங்களை இயக்கும் பட்சத்தில் அவர்களது பெற்றோர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும்" என்றும் எச்சரிக்கை விடுத்தார். இதேபோல் அரசின் எச்சரிக்கையை மீறி கேளிக்கை நிகழ்ச்சிகளை நடத்தும் தனியார் விடுதிகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com