நிருபர்கள் - சாந்தகுமார், ரகுமான்
புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது மக்கள் கடற்கரைப் பகுதிகளில் ஒன்று கூடுவது வழக்கம். அப்படி ஒன்று கூடும் போதும் சில நேரங்களில் கடலில் குளிக்கும் போது அலையில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்பட்டு விடுகிறது. அந்த வகையில் இந்த வருடமும் தமிழகத்தில் சில உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை கானத்தூர் உத்தண்டி கடற்கரையில் அதிகாலையில் 3 நண்பர்கள் கடலில் இறங்கி குளித்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக இராட்சத அலையில் சிக்கி மூவரும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். இதில் ஒருவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஈஞ்சம்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், மற்றொருவர் கானத்தூர் அருகே சடலமாக கரை ஒதுங்கினார்.
இந்நிலையில், போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்தவர்களில் ஒருவர் பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ராஜா (25) என்பதும் இவர், ஐடி ஊழியர் என்பதும் தெரியவந்தது. அதே போல் மற்றொருவர் திருக்கோவிலூரை சேர்ந்த தாமோதரன் என்பதும் தெரியவந்தது. இதில், உயிருடன் மீட்கப்பட்ட ஹரிஹரன் என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நலமாக வீடு திரும்பினார்.
கடற்கரையில் புத்தாண்டு நேரத்தில் குளிக்க போலீசார் தடை விதித்திருந்த நிலையில், தடையை மீறி குளித்த இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கானத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 30 ஆம் தேதி அக்கரை கடற்கரையில் குளித்த போது இழுத்துச் செல்லபட்டு காணாமல் போன சோழிங்கநல்லூரை சேர்ந்த பிரகாஷ் (20), என்பவர் இன்று அதிகாலை உத்தண்டி கடற்கரையில் சடலமாக கரை ஒதுங்கினார். அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக இராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கானத்தூர் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இதேபோல் புதுச்சேரியில் நேற்று முந்தினம் புத்தாண்டையொட்டி பழைய துறைமுக கடல் பகுதியில் குளித்துக் கொண்டிருந்த போது ராட்ச அலையில் இழுத்துச் செல்லப்பட்ட நெல்லித்தோப்பு டி.ஆர்.நகரைச் சேர்ந்த சீனிவாசன் - மீனாட்சி தம்பதியினரின் மகள்களான மோகனா (16), லேகா (14) ஆகிய இருவரும், கதிர்காமம் பகுதியைச் சேர்ந்த நவீன் (16) மற்றும் அவரது நண்பர் கிஷோர் (16) ஆகிய நான்கு மாணவர்களும் மாயமாகினர்.
இவர்களில் மோகனா, லேகா மற்றும் கிஷோர் ஆகியோரின் உடல்கள் வீராம்பட்டினம் கடல் பகுதியில் நேற்று அடுத்தடுத்து கரை ஒதுங்கியது. நவீனின் உடலை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், இன்று அதிகாலை சடலமாக கரை ஒதுங்கியது. இதையடுத்து நான்கு உடல்களையும் மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.