சென்னை கோயம்பேடு சந்தை கொரோனா வைரஸால் தற்காலிகமாக மூடப்பட்டதால், அதற்குப் பதிலாக திருமழிசையில் தற்காலிக சந்தை நாளை மறுநாள் திறக்கப்படுகிறது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. சென்னையில் பாதிப்பு நாள்தோறும் நூற்றுக்கணக்கான எண்ணிக்கையில் உயர்ந்து வருகிறது. அத்துடன் சென்னை கோயம்பேடு சந்தை மூலம் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு கொரோனா பாதிப்பு பரவியுள்ளது. இதனால் கோயம்பேடு சந்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் காய்கறிகளின் விலை உயர்ந்து, தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனைச் சரிசெய்யும் வகையில் சென்னையை அடுத்த திருமழிசை பகுதியில் தற்காலிக காய்கறி சந்தை தயார் செய்யப்பட்டுள்ளது. தற்போது பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. பணிகளை, தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, கோயம்பேடு மொத்த வியாபாரிகள் சங்கத் தலைவர் ராஜசேகர் மற்றும் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ராஜசேகர், காய்கறி சந்தை அமைக்கும் பணிகள் 50 சதவீதம் முடிந்தால், பொதுமக்களின் நலன் கருதி வருகிற 9ஆம் தேதியே திறக்கப்படும் எனத் தெரிவித்தார். மேலும், அத்தியாவசியக் கடைகள் அனைத்தையும் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினார்.