ஆசிரியர் தகுதி தேர்வுத்தாள்-2க்கான நியூ அப்டேட்! 30 பேரின் விண்ணப்பம் நிராகரிப்பு!

ஆசிரியர் தகுதி தேர்வுத்தாள்-2க்கான நியூ அப்டேட்! 30 பேரின் விண்ணப்பம் நிராகரிப்பு!
ஆசிரியர் தகுதி தேர்வுத்தாள்-2க்கான நியூ அப்டேட்! 30 பேரின் விண்ணப்பம் நிராகரிப்பு!
Published on

ஆசிரியர் தகுதித் தேர்வுத்தாள்-2 தேர்வுக்கான கால அட்டவணையையும், ஹால்டிக்கெட்டுக்கான அறிவிப்பையும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது ஆசிரியர் தகுதித்தேர்வு வாரியம்.

முக்கிய அப்டேட்டாக ஆசிரியர் தகுதித் தேர்வுத்தாள்-2 தேர்வை எழுதுவதற்கு விண்ணப்பித்த 30 தேர்வர்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த நபர்களில் பாலிடெக்னிக் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட 9 பேரும், ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் ஒன்றுக்கு நடைபெற்ற தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 2 பேரும், விண்ணப்பித்தினை முழுமையாக பூர்த்தி செய்யாதவாறு புகைப்படம் ஒட்டாமலும், கையொப்பம் போடாமலும் இருப்பது போன்றவற்றின் அடிப்படையில் 21 தேர்வர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக வெளியிடப்பட்டுள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2022ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் 2022 மார்ச் 14ஆம் தேதி முதல் ஏப்ரல் 26ஆம் தேதி வரையில் பெறப்பட்டது. தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது பிப்ரவரி 3ஆம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி வரை உள்ள தேதிகளில் தாள்-2ற்குரிய தேர்வுகள் கணினி வழியில் நடத்தப்பட உள்ளது. கணினி வழித் தேர்விற்காக (Computer Based Examination) பயிற்சித் தேர்வு (Practice Test) மேற்கொள்ள விரும்பும் தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பயிற்சியினை மேற்கொள்வதற்கு, தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன்பிருந்து வாய்ப்பு வழங்கப்படும். இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயிற்சி மேற்கொள்ளலாம்.

ஆசிரியர் தகுதித் தேர்வுத்தாள் 2 தேர்வானது பிப்ரவரி 3ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்த தேர்விற்கான கால அட்டவணை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தேர்விற்கு மூன்று நாட்கள் முன்னதாக தேர்வர்களுக்கான ஹால்டிக்கெட்டை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வர்களுக்கு எந்த மாவட்டத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது என்ற விபரங்கள் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளன. குறிப்பாக எந்த தேர்வு மையத்தில் தேர்வு என்பது தேர்வுக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக வெளியிடப்படும்.

மேலும் ஹால் டிக்கெட்டில் தேர்வு மையங்களை மாற்ற வேண்டுமென கூறப்படும் கோரிக்கைகள் நிராகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் http://www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் தேர்வர்கள் தங்களின் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட்டில் தேர்வு மையத்தில் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் முடிவே இறுதியானது என்றும், தேர்வை எப்பொழுது வேண்டுமானாலும் ரத்து செய்யவும், ஒத்தி வைக்கவும் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு அதிகாரம் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார். ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2 எழுதுவதற்கு 4 லட்சத்து ஆயிரத்து 885 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com