போக்குவரத்து விதியை மீறுபவர்கள் தப்ப முடியாத வகையில் புதிய நடைமுறை போக்குவரத்து காவல்துறையினரால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
போக்குவரத்து காவலர்களிடம் சிக்கிக்கொள்ளும் வாகன ஓட்டிகள் அதற்கு முன் விதிகளை மீறியிருக்கிறார்களா என்ற விவரங்களை அறிந்துகொள்ளும்படி மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் எங்கு போக்குவரத்து விதியை மீறியிருந்தாலும் அவற்றைப் பதிவு செய்யும் வகையில் ‘வாகன்’, ‘சாரதி’ ஆகிய மென்பொருள்கள் மூலம்வடிவமைக்கப்பட்டுள்ளன.
இதற்கு முன்பு அபராத தொகைக்கான ரசீதை அச்சிட்டு தரும் வகையில் இருந்த மின்னணு இயந்திரம், தற்போது இந்திய அளவில் ஒருங்கிணைக்கப்பட்ட மென்பொருளாக மாற்றப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகளின் புகைப்படம், ஓட்டுநர் உரிமம், உரிமம் ரத்து செய்யப்பட்டிருந்தால் அதுவும் பதிவேற்றப்பட்டிருக்கும். இதன் மூலம் வாகன ஓட்டிகள் குறித்த தகவல்களை தெரிந்து கொள்ள முடியும் எனப் போக்குவரத்து காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
விதிகளை மீறும் வாகன ஓட்டிகளின் பெயர், முகவரி உள்ளிட்டவற்றை குறிப்பிட்டு மின்னணு ரசீது அச்சிட்டு அவர்களிடம் தரப்படும். வாகன ஓட்டிகள் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மூலம் உடனடியாக அபராத தொகையை கட்டலாம் அல்லது அஞ்சலகம் மற்றும் இ-சேவை மையத்திலும், பே-டிஎம் மூலமாகவும் செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.