தமிழகத்தில் புதிதாக மின் இணைப்பு பெறுவதற்கான கட்டணம் வரும் நாட்களில் உயர இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கடந்த வாரம் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய மாநில ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது இதில் கட்டணம் உயர்வு குறித்து சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி வீட்டு உபயோக சிங்கிள் பேஸ் ஒரு கிலோவாட் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ரூபாய் 200 முதல் 1000 வரை பாதுகாப்பு கட்டணம் உயர வாய்ப்பு இருக்கிறது. இதே மூன்று பேஸ் இணைப்பு பெறுவோருக்கு கட்டண உயர்வு என்பது ஒரு கிலோவாட்க்கு 600 முதல் 1800 வரை உயர வாய்ப்பு உள்ளதாக அந்த கமிட்டி பரிந்துரைத்துள்ளது.
புதிய மின் இணைப்பு பெறுவதற்கான விண்ணப்பக் கட்டணம் 50 ரூபாயிலிருந்து 400 ரூபாயாக உயரும். இதேபோல் வணிகரீதியான பயன்பாட்டிற்கு ஒரு கிலோவாட் புதிய மின் இணைப்பிற்கு 500 ரூபாய் இருக்கும் கட்டணம் 2000 ரூபாயாக உயர வாய்ப்பு இருக்கிறது. இதில் உயர்ந்த மின் இணைப்பு கேட்டு விண்ணப்பிக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு கிலோவாட் 3100 ரூபாயாக உயரும். இது தற்போது 800 ரூபாய் என்று இருக்கிறது.
தற்போது மின்சார பிரச்னை ஏற்பட்டால் மின் ஊழியர்கள் வந்து ஆய்வு செய்வதற்கு கட்டணம் ஏதும் கிடையாது. ஆனால் இனிவரும் காலங்களில் ஆய்வு செய்வதற்கு வீட்டு உபயோக இணைப்புக்கு 580 முதல் 1920 வரை கட்டணம் வசூலிக்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதே 3 பேஸ் இணைப்பு வைத்திருப்பவர்களுக்கு 3,810 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் கேட்டபோது பொதுமக்களிடம் கருத்து கேட்டபிறகு கட்டண உயர்வு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மின்சார வாரியத்திடம் கேட்டபோது கடந்த 2004ஆம் ஆண்டுதான் கட்டண உயர்வு இருந்ததாகவும் அதற்கு பிறகு கட்டண உயர்வு இல்லை என்றும் தெரிவித்திருக்கிறது. 2018 -19 ஆண்டில் 29 லட்சம் புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.