“ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதித்தது சட்டவிரோதம்”- நீதிமன்றத்தை நாடியது யார் தெரியுமா? விவரம் இதோ!

தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டு முறைபடுத்துதல் சட்டத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
Online Gambling
Online GamblingFile Image
Published on

தமிழக அரசு கடந்த 2021ம் ஆண்டு கொண்டு வந்த ஆன்லைன் விளையாட்டு தடை சட்டத்தை செல்லாது என அறிவித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. அதைத் தொடர்ந்து, புதிய சட்டம் இயற்ற பரிந்துரைகளை வழங்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்தது.

இக்குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் கடந்த 2022ம் ஆண்டு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டு முறைபடுத்துதல் சட்டம் தமிழகத்தில் இயற்றப்பட்டது. அச்சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் 2023 மார்ச் 8ம் தேதி திருப்பி அனுப்பினார். அதன்பின் மார்ச் 23ம் தேதி மீண்டும் பேரவையில் அதே சட்டம் இயற்றப்பட்டது. அதற்கு ஏப்ரல் 7ம் தேதி ஆளுநர் ஒப்புதல் அளித்தார்.

இந்த சட்டத்தை எதிர்த்து 69 ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களை உறுப்பினர்களாகக் கொண்ட அகில இந்திய விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அந்த மனுவில், தமிழக அரசின் தடை சட்டத்தால் தங்கள் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பாதிப்பை எதிர்கொள்வதாகவும், தமிழக அரசின் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பதற்கு முந்தைய நாளான ஏப்ரல் 6ம் தேதி மத்திய அரசின் தகவல் தொழிட்நுட்பத்துறை ஆன்லைன் விளையாட்டுகளை முறைபடுத்தும் வகையில் திருத்த விதிகளை அறிவித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகி இளைஞர்கள் கண் பார்வை குறைவு, நடவடிக்கைகளில் மாற்றம் போன்ற உடல்நல பிரச்னைகளால் பாதிக்கப்படுவதாக சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதுசம்பந்தமாக அறிவியல்பூர்வமான ஆய்வு எதையும் மேற்கொள்ளவில்லை என மனுவில் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும் அம்மனுவில், “18 வயதுக்கு குறைவாக உள்ளவர்களை ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் அனுமதிப்பதில்லை. ஆன்லைன் விளையாட்டுகளை முறைபடுத்துவதற்கான சட்டத்தை இயற்ற நாடாளுமன்றத்திற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.

எந்த ஆதாரங்களும் அடிப்படையும் இல்லாமல், பொது ஒழுங்கைச் சுட்டிக்காட்டி, இந்த சட்டத்தை இயற்றுவதற்கு தமிழக அரசிற்கு தகுதி இல்லை. உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட சட்டத்தை மீண்டும் இயற்றி உள்ளனர்.

திறமைக்கான விளையாட்டுக்கும், வாய்ப்பிற்கான விளையாட்டிற்குமான வேறுபாட்டை விளக்காமல் அனைத்து ஆன்லைன் விளையாட்டிற்கும் தடை விதிக்கப்பட்டது சட்டவிரோதமானது.

ரம்மி, போக்கர் போன்ற திறமைக்கான விளையாட்டுகளை சூதாட்டமாக வகைப்படுத்தியது தன்னிச்சையானது என்பதால், தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டு முறைபடுத்துதல் சட்டத்தை அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது என அறிவிக்க வேண்டும். இச்சட்டத்தை அமல்படுத்த தடை விதிக்க வேண்டும்” என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com